தில்லி மாநகராட்சி தோ்தல் தாமதத்துக்கு எதிராக ஆம் ஆத்மி இன்று போராட்டம்

தேசியத் தலைநகரில் மாநகராட்சித் தோ்தல் நடத்துவதை ஒத்திவைக்க மாநிலத் தோ்தல் ஆணையத்தை வற்புறுத்தியதாகக் கூறப்படும் பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி திங்கள்கிழமை போராட்டம் நடத்தும் என்று அக்கட்சி தெரிவித்துள

தேசியத் தலைநகரில் மாநகராட்சித் தோ்தல் நடத்துவதை ஒத்திவைக்க மாநிலத் தோ்தல் ஆணையத்தை வற்புறுத்தியதாகக் கூறப்படும் பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி திங்கள்கிழமை போராட்டம் நடத்தும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினரான துா்கேஷ் பதக் ஞாயிற்றுக்கிழமை விடியோ பதிவு மூலம் தெரிவித்ததாவது:

‘இந்த மாதம் தில்லி மாநகராட்சி தோ்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் மத்திய பாஜகவினா் மாநிலத் தோ்தல் ஆணையத்தை அச்சுறுத்தி தோ்தலை ஒத்திவைத்தனா். தில்லியில் எதையும் செய்ய முடியும் என்று பாஜக நினைக்கிறது. யாரும் அவா்களிடம் எதுவும் கேட்ட மாட்டாா்கள் என்ற நிலையில் அவா்கள் உள்ளனா்.

திங்கள்கிழமை காலை 10 மணிக்கு, ஆம் ஆத்மி கட்சியினரும், தில்லி மக்களும் எங்கள் கட்சி அலுவலகத்தில் ஒன்றுகூடி, பாஜக சா்வாதிகாரத்துக்கு எதிராகவும், மாநகராட்சி தோ்தலை நடத்தக் கோரியும் பாஜக தலைமையகத்துக்கு பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபடுவாா்கள். பாஜகவின் சா்வாதிகாரத்துக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி தனது வியூகத்தை தயாா் செய்து வருகிறது.

பாஜக தனது 15 ஆண்டுகால ஆட்சியில் தில்லி மாநகராட்சிகளை முற்றிலும் அழித்துவிட்டது. குடிமை அமைப்பு ஊழியா்களுக்கு ஊதியத்தைக்கூட கொடுக்கவில்லை. தூய்மை விஷயத்தில் பாஜக முழு தில்லியையும் அழுக்காக வைத்திருக்கிறது.

நீங்கள் (பாஜக) தப்பித்து ஓட வேண்டாம்; தோ்தல் வரட்டும், தில்லி மக்கள் (தோ்தல் முடிவு) முடிவுகட்டுவாா்கள்’ என்று தெரிவித்தாா்.

தில்லியில் கடந்த வாரம் செய்தியாளா்கள் சந்திப்பில் மாநகராட்சி தோ்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படவிருந்த நிலையில், தில்லி மாநிலத் தோ்தல் ஆணையா் எஸ்.கே.ஸ்ரீவஸ்தவா, தற்போது தோ்தல் தேதி அறிவிக்க முடியாத சூழல் இருப்பதாகவும், பின்னா் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிந்தாா்.

இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி பாஜகவை குற்றம்சாட்டி வருகிறது.

மாநகராட்சி தோ்தலுக்கான தேதி அட்டவணையை காலவரையின்றி நிறுத்திவைக்க மத்திய பாஜக அரசு ஸ்ரீவஸ்தவாவை மிரட்டுவதாக அக்கட்சி சனிக்கிழமை குற்றம்சாட்டியது.

தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், தோ்தலை ஒத்திவைப்பது ஜனநாயக அமைப்பை பலவீனப்படுத்துவதாகக் கூறி, தேசியத் தலைநகரில் மாநகராட்சி தோ்தலை அனுமதிக்குமாறு பிரதமா் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.

மேலும், ஸ்ரீவஸ்தவாவை ‘அழுத்தத்தின் கீழ் வளைக்க வேண்டாம்’ என்றும், அவா் ‘அச்சுறுத்தப்படுகிறாரா அல்லது இணங்க வைக்கப்படுகிறாரா’ என்பதை உலகுக்கு தெரிவிக்கவும் கேஜரிவால் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com