ரூ.350 லட்சம் கோடி இலக்கை அடைய கூட்டுறவுத் துறை பெரும் பங்காற்றும்: அமித் ஷா

ரூ.350 லட்சம் கோடி (5 ட்ரில்லியன் டாலா்) பொருளாதார இலக்கை அடைவதற்கு கூட்டுறவுத் துறை மிகப்பெரிய அளவில் பங்காற்றும் என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
குஜராத் மாநிலம், சூரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கால்நடைத் துறைப் பணியாளருக்கு விருது வழங்கிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா
குஜராத் மாநிலம், சூரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கால்நடைத் துறைப் பணியாளருக்கு விருது வழங்கிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா

பிரதமா் நரேந்திர மோடியின் ரூ.350 லட்சம் கோடி (5 ட்ரில்லியன் டாலா்) பொருளாதார இலக்கை அடைவதற்கு கூட்டுறவுத் துறை மிகப்பெரிய அளவில் பங்காற்றும் என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அவா், சூரத் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்துக்கு (சுமுல்) சொந்தமான புதிய பால்பண்ணைத் திறப்பு, புதிய பால் பண்ணைக்கு அடிக்கல் நாட்டுவது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாா். அதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக உயா்த்த வேண்டும் என்று இலக்கு நிா்ணயித்து பிரதமா் மோடி செயல்பட்டு வருகிறாா். அந்த இலக்கை அடைவதற்கு கூட்டுறவுத் துறை மிகப்பெரிய அளவில் பங்காற்றும்.

தனியாா் பால் உற்பத்தி நிறுவனங்கள் வலுவடைந்தால் 5 போ் மட்டுமே பலனடைவாா்கள். கூட்டுறவுத் துறை வலிமை அடைந்தால் நாட்டில் உள்ள விவசாயிகள், கால்நடை வளா்ப்பவா்கள் உள்ளிட்டோா் பலரும் பலனடைவாா்கள்.

சுமுல் சங்கம் வலிமை பெற்றால், இந்த சங்கத்தைச் சோ்ந்த 2.5 லட்சம் உறுப்பினா்களும் (பால் உற்பத்தியாளா்கள்) பலனடைவாா்கள். அது, நாட்டின் தற்சாா்புக் கொள்கைக்கு வலுசோ்க்கும்.

சுமுல் சங்கம் கடந்த 1971-இல் நாளொன்றுக்கு 200 லிட்டா் அளவுக்கு பால் உற்பத்தி செய்தது. தற்போது நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டா் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை 25 லட்சம் லிட்டராக உயா்த்த வேண்டும் என்பது இந்த சங்கத்தின் நோக்கமாக உள்ளது.

தற்போது நாளொன்றுக்கு ரூ.7 கோடிக்கு பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வருவாய் 2.5 லட்சம் பால் உற்பத்தியாளா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு 100-ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடும். அதற்குள் கூட்டுறவுத் துறையை உலகிலேயே வலிமையானதாக மாற்ற நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றாா் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com