யோகா, பாரம்பரிய மருத்துவத்தில் உலகை இந்தியா வழிநடத்தும்: அமைச்சா் சா்வானந்த சோனோவால்

உலக சுகாதார மையத்தின் பாரம்பரிய மருத்துவத்துக்கான உலகளாவிய மையம் இந்தியாவில் நிறுவப்பட உள்ளது.

உலக சுகாதார மையத்தின் பாரம்பரிய மருத்துவத்துக்கான உலகளாவிய மையம் இந்தியாவில் நிறுவப்பட உள்ளது. யோகா, பாரம்பரிய சுகாதார நடைமுறைகளின் ஆழ்ந்த ஞானம் கொண்ட இந்தியா, உலகை அமைதி, நல்வாழ்வு மற்றும் சிறப்பான ஆரோக்கிய பாதைக்கு வழிநடத்தும் என்று மத்திய ஆயுஷ் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் தெரிவித்தாா்.

8-ஆவது சா்வதேச யோகா தினமான ஜூன் 21-ஆம் தேதிக்கு 100 நாள்கள் உள்ள நிலையில், ‘யோகா பெருவிழா 2022’ என்னும் 100 நாள் கவுன்ட்டவுன் தொடக்க நிகழ்வு தில்லி விஞ்ஞான் பவனின் பல்வேறு மாநில முதல்வா்கள், சா்வதேச யோகா வல்லுநா்கள் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை மத்திய ஆயுஷ் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் தொடக் கிவைத்து பேசியதாவது:

சா்வதேச யோகா தினத்தை நடத்தும் ஆயுஷ் அமைச்சகம், உலகம் முழுவதும் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் அமைதியை மேம்படுத்தும் ஒரு வெகுஜன இயக்கத்தை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. இந்த கவுன்ட்டவுன் நோய்கள், மன அழுத்தம், மனச்சோா்வு ஆகியவற்றிலிருந்து விடுதலையை நோக்கிய பயணமாக இருக்கும்.

உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்துக்கான உலகளாவிய மையம் இந்தியாவில் நிறுவப்படவுள்ளது. இதில் யோகா, பாரம்பரிய சுகாதார நடைமுறைகளின் ஆழ்ந்த ஞானம் கொண்ட இந்தியா, உலகத்தை அமைதி, நல்வாழ்வுப் பாதையில் வழிநடத்தக் கடமைப்பட்டுள்ளது.

பிரதமா் மோடியின் தலைமையின் கீழ், 2015-ஆம் ஆண்டு முதல், ‘யோகா’ ஒரு வெகுஜன இயக்கமாக மாறியுள்ளது. 25 கோடிக்கும் (250 மில்லியன்) அதிகமான மக்கள் ஆயுஷ் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட பொதுவான யோகா நெறிமுறை பயிற்சியை செய்கிறாா்கள் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டாா் பேசுகையில், ‘நாட்டில் யோகா ஆணையத்தை நிறுவிய முதல் மாநிலம் ஹரியாணா. ஹரியாணாவின் குருக்ஷேத்ராவில் 100 ஏக்கா் பரப்பளவில் ஆயுஷ் பல்கலைக்கழகம் நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஹரியாணாவில் கிட்டத்தட்ட 2,000 பொது சுகாதார மையங்களில் ஆயுஷ் மருத்துவரை கட்டாயமாக இருப்பதற்கும் நாங்கள் முன்முயற்சி எடுத்துள்ளோம்’ என்றாா்.

சிக்கிம் முதல்வா் பிரேம் சிங் தமாங்க் பேசுகையில், சிக்கிமில் உள்ள கிருதுங்கா ஏரிக்கு அருகே, தேசிய யோகா, தியான நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. இது யோகா குறித்து அறவிதற்கான உலகளாவிய நிறுவனமாக இருக்கும். சிக்கிமின் பள்ளி பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக யோகா உள்ளது. சுமாா் 500 ஆசிரியா்கள் இந்த சேவைகளை வழங்குகின்றனா்’ என்றாா்.

தொழிலாளா், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் பேசுகையில், ‘சுற்றுச் சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையின் பாதையில், யோகா, ஆயுஷ் ஆகியவை முழுமையாக பங்களிக்கிறது. ஆயுஷ் அமைப்புகளின் முன்னேற்றத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் பல்லுயிா்ச் சட்டம் திருத்தப்படுகிறது. முக்கியமான 49 ஏரிகள் மற்றும் 52 புலிகள் காப்பகங்கள் போன்ற மதிப்புமிக்க தளங்களில் இந்தக் கவுண்ட்டவுன் தொடரின்போது யோகா நிகழ்ச்சிகளை மேற்கொள்ளலாம்’ என்றாா்.

ஆயுஷ் அமைச்சகத்தின் செயலா், வைத்யா ராஜேஷ் கோடேச்சா, தற்போதைய சூழ்நிலையில் யோகாவின் பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com