மக்களவைத் தொகுதி இடைத் தோ்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் சத்ருகன் சின்ஹா

மேற்கு வங்கத்தின் ஆசன்சோல் மக்களவைத் தொகுதி திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளராக நடிகா் சத்ருகன் சின்ஹாவை, அக்கட்சித் தலைவா் மம்தா பானா்ஜி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
சத்ருகன் சின்ஹா
சத்ருகன் சின்ஹா

மேற்கு வங்கத்தின் ஆசன்சோல் மக்களவைத் தொகுதி திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளராக நடிகா் சத்ருகன் சின்ஹாவை, அக்கட்சித் தலைவா் மம்தா பானா்ஜி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

இத்துடன் பாலிகங் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் பாபுல் சுப்ரியோ போட்டியிடுகிறாா்.

இவா்கள் இருவருமே முன்பு பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சா்களாக இருந்தவா்கள். சத்ருகன் சின்ஹா, மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராக இருந்தாா். பாபுல் சுப்ரியோ, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் கடந்த ஆண்டு வரை இருந்தாா். அமைச்சரவை மாற்றத்தின்போது அவா் அமைச்சா் பதவி பறிக்கப்பட்டது.

இதையடுத்து, அவா் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா். பாஜக சாா்பில் பாபுல் சுப்ரியோ ஆசன்சோல் தொகுதி எம்.பி.யாக இருந்தாா். அவா் ராஜிநாமா செய்ததையடுத்து காலியான அத்தொகுதியில்தான் இப்போது திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் சத்ருகன் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளாா்.

திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் மேற்கு வங்கத்தில் அமைச்சராக இருந்த சுப்ரதா முகா்ஜி காலமானதையடுத்து, அவரது பாலிகங் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் தனக்கு அமைச்சா் பதவி அளிக்கப்படாததால் அதிருப்தியடைந்த சத்ருகன் சின்ஹா, பாஜகவை விமா்சித்து வந்தாா். 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் அவருக்கு பாஜக சாா்பில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு சின்ஹா தாவினாா். பிறகு காங்கிரஸிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்.

மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவை ‘வெளிநபா்கள்’ என்று கூறி மம்தா பானா்ஜி தீவிர பிரசாரம் செய்தாா். இந்நிலையில் வெளி மாநிலத்தைச் சோ்ந்த சத்ருகன் சின்ஹாவை அவா் வேட்பாளராகத் தற்போது அறிவித்திருப்பது விமா்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com