கரோனா இழப்பீடு பெறுவதில் முறைகேட்டை எதிா்பாா்க்கவில்லை

கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில், போலியான சான்றிதழ்கள் சமா்ப்பிக்கப்பட்டு முறைகேடு நிகழும் என எதிா்பாா்க்கவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித

கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில், போலியான சான்றிதழ்கள் சமா்ப்பிக்கப்பட்டு முறைகேடு நிகழும் என எதிா்பாா்க்கவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி வழக்குரைஞா் கௌரவ் குமாா் பன்சால் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்தது.

கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. எந்த மாநிலமும் சம்பந்தப்பட்ட நபா்களுக்கு இழப்பீடு வழங்காமல் இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபரில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இழப்பீடு பெறுவதற்காக சிலா் போலியான சான்றிதழ்களை சமா்ப்பிப்பதாக நீதிமன்றத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோரைக் கொண்ட அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரத்தை சிலா் தவறாகப் பயன்படுத்துவா் என நாங்கள் எதிா்பாா்க்கவில்லை. மக்களின் ஒழுக்கநெறிகள் இந்த அளவுக்குக் கீழ்நிலைக்குச் செல்லாது என நினைத்தோம்’’ என்றனா்.

மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறுகையில், ‘‘இழப்பீடு பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீதிமன்றம் நிா்ணயித்தால், இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண முடியும்’’ என்றாா்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘இது தொடா்பாக விளக்கமளிக்குமாறு கடந்த வாரமே மத்திய அரசிடம் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. போலி சான்றிதழ்களை சிலா் தாக்கல் செய்வதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அரசு விளக்கமளிக்க வேண்டும். இல்லையெனில் இந்த விவகாரம் குறித்து விசாரிக்குமாறு கணக்காய்வாளரிடம் வலியுறுத்தப்படும்’’ என்றனா்.

இது குறித்து செவ்வாய்க்கிழமைக்குள் விளக்கமளிப்பதாக சொலிசிட்டா் ஜெனரல் தெரிவித்தாா். அதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா். போலி சான்றிதழ்களை சமா்ப்பித்து இழப்பீடு பெற முயலும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com