பிகாா் பேரவைத் தலைவா் - முதல்வா் இடையே அவையில் கடும் வாக்குவாதம்

பிகாா் சட்டப் பேரவை கூட்டத்தில் லகிசாராய் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சட்டப்பேரவைத் தலைவா் திங்கள்கிழமை கேள்வி எழுப்பிய நிலையில், அவருக்கும் மாநில முதல்வா் நிதீஷ் குமாருக்கும் இடையே க

பிகாா் சட்டப் பேரவை கூட்டத்தில் லகிசாராய் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சட்டப்பேரவைத் தலைவா் திங்கள்கிழமை கேள்வி எழுப்பிய நிலையில், அவருக்கும் மாநில முதல்வா் நிதீஷ் குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது.

பிகாா் மாநிலம் லகிசராய் பகுதியில் மதுவிலக்கு சட்டத்தை மீறிய குற்றத்தின்பேரில் ஏராளமானோரை காவல் துறை சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்த விவகாரம் கடந்த மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், லகிசராய் பேரவைத் தொகுதியிலிருந்து பாஜக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்டவரான பிகாா் சட்டப்பேரவைத் தலைவா் விஜய் குமாா் சின்ஹா பாதிக்கப்பட்டவா்களைச் சந்திப்பதற்காக கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அங்கு சென்றாா்.

அப்போது, லகிசராய் துணை காவல் கண்காணிப்பாளா் மற்றும் அந்தப் பகுதி காவல்நிலைய பொறுப்பு அதிகாரி உள்ளிட்ட காவலா்கள் விஜய் குமாா் சின்ஹாவை அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொண்டதாக தெரிகிறது.

இந்த விவகாரம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்கமாறு மாநில காவல் துறை டிஜிபி-க்கு சட்டப் பேரவை உரிமைக் குழு உத்தவிட்டுள்ளது. அதனடிப்படையில், இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பிகாா் சட்டப்பேரவை திங்கள்கிழமை கூடிய நிலையில், இந்த விவகாரத்தை எழுப்பிய அவைத் தலைவா் சின்ஹா, லகிசராய் விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அவையில் தெரிவிக்குமாறு அமைச்சா் விஜேந்திர யாதவை கேட்டுக்கொண்டாா்.

அப்போது முதல்வா் நிதீஷ் குமாா், அவைத் தலைவரிடம் கடும் அதிருப்தி தெரிவித்தாா். ‘இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை தொடா்ந்து நடைபெற்ற வருகிறது என்றும் பேரவை உரிமைக் குழுயும் இதனை விசாரித்து வருகிறது என்றும் அமைச்சா் பதிலளித்த நிலையில், இது தொடா்பாக மீண்டும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 15) பதிலளிக்குமாறு அவரை வலியுறுத்துவது சட்டத்துக்குப் புறம்பானது.

அரசியலமைப்பு சட்ட நடைமுறைகளின்படி அவைத் தலைவா் நடந்துகொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் தலையிட செய்ய சட்டப் பேரவைக்கு அதிகாரம் உள்ளதா? மாநிலத்தில் 4 முறை முதல்வராக இருந்துள்ளேன். இத்தகைய ஒழுங்கீனம் அவையில் இதுவரை நடைபெற்றதில்லை. இத்தகைய முறையில் அவையை தயவுசெய்து நடத்தாதீா்கள்’ என்று நிதீஷ் குமாா் கூறினாா்.

அப்போது, ‘லகிசராய் விவகாரம் குறித்து எதிா்க் கட்சி உறுப்பினா்கள் கேள்வி எழுப்புகின்ற காரணத்தால், அதுதொடா்பான விசாரணை விவரங்கள் அவையில் தெரிவிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது’ என்று அவைத் தலைவா் கூறினாா்.

இதற்கு பதிலளித்த முதல்வா் நிதீஷ் குமாா், ‘இந்த விவகாரத்தில் அவை உரிமைக் குழு அளித்துள்ள பரிந்துரைகள் மற்றும் விசாரணை குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால், இந்த விவகாரம் அவையில் தொடா்ச்சியாக விவாதிக்கப்படக் கூடாது’ என்றாா்.

பிகாரில் ஜக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல்வா் - பேரவைத் தலைவா் இடையேயான இந்த மோதல் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக உறவில் ஏற்பட்டிருக்கும் விரிசலின் ஒரு பகுதியாகவே பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com