நெடுஞ்சாலை விபத்துகள் குறித்து நிதின் கட்கரி சொன்ன நல்ல தகவல்

சாலை விபத்துகள் குறைந்துள்ளதாகவும் அதே போல விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பும் குறைந்திருப்பதாகவும் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலை விபத்துகள் குறித்து நிதின் கட்கரி சொன்ன நல்ல தகவல்
நெடுஞ்சாலை விபத்துகள் குறித்து நிதின் கட்கரி சொன்ன நல்ல தகவல்

புது தில்லி: மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளால் தேசிய அளவில் சாலை விபத்துகள் குறைந்துள்ளதாகவும் அதே போல விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பும் குறைந்திருப்பதாகவும் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் நிதின் கட்கரி அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார். 2018-ஆம் ஆண்டு 4,67,044 விபத்துகள் நடந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு அது 3,66,138 ஆக குறைந்துள்ளது. அதே போல 2018-ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் 1,51,417 பேர் உயிரிழந்தனர். 2020ஆம் ஆண்டு 1,31,714 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

2018 முதல் 2020-ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த நெடுஞ்சாலை விபத்துகள் குறித்து மாநில வாரியாக பட்டியலை அவர் வெளியிட்டார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் அதிக அளவில் சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. 2020-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 45,484 விபத்துகள் நடந்துள்ளன. அதில் 8,059 பேர் உயிரிழந்துள்ளனர். 50,551 பேர் காயமடைந்துள்ளனர். புதுச்சேரியைப் பொறுத்தவரை 969 விபத்துகளில் 145 பேர் உயிரிழந்துள்ளனர். 1,019 பேர் காயமடைந்துள்ளனர். எனினும் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இது குறைவு தான் என்றார்.

மேலும், மத்திய அரசு சாலை விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக அதிக அளவில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் பகுதிகளைக் கண்டறிவதற்கான சுற்றறிக்கையை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையில், தேசிய நெடுஞ்சாலையில், அடிக்கடி சாலை விபத்து நடைபெறும் இடத்தைக் கண்டறியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக 5 சாலை விபத்துகள் அல்லது பத்து உயிரிழப்புகள் நடந்த இடங்களில் 500 மீட்டர் நீளத்திற்கு கருப்பு இடமாகக் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநில காவல்துறை சார்பில் சாலை விபத்துகள் குறித்து சேகரித்துள்ள தரவுகளின் அடிப்படையில், அமைச்சகத்தின் போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவு, இவற்றைத் தொகுத்துள்ளது. சாலை விபத்துகளைக் குறைக்கவும், நிரந்தர தீர்வு காணவும் நீண்ட கால நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை  அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com