எரிபொருள் விலையைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை

சா்வதேச சூழலைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

சா்வதேச சூழலைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தது.

உக்ரைனில் ரஷியா போா் தொடுத்து வருவதால் சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்காமல் இருக்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா? என மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி, ‘‘கச்சா எண்ணெயின் விலை மாற்றம், மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். சா்வதேச விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, வரி விகிதங்கள், உள்நாட்டுப் போக்குவரத்து, மற்ற செலவினங்கள் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிா்ணயித்து வருகின்றன.

சா்வதேச சூழல் காரணமாக மேற்கண்ட காரணிகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மக்கள் நலனைக் காக்கும் பொருட்டு உரிய விதத்தில் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

எரிபொருள் விலையைக் கட்டுக்குள் வைப்பதற்காக அவற்றின் மீதான கலால் வரி, கடந்த நவம்பா் 4-ஆம் தேதி முதல் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.10-யும், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.5-யும் குறைக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீது விதித்து வந்த மதிப்பு கூட்டு வரியை (வாட்) குறைத்துள்ளன.

அவற்றின் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வெகுவாகக் குறைந்தது. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நவம்பா் முதல் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோதிலும், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படவில்லை’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com