ரூ.53,600 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு விடுவிக்கப்படவுள்ளது

தமிழகம், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டுக்கான ரூ.53,661 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடு விடுவிக்கப்பட வேண்டிள்ளதாக

தமிழகம், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டுக்கான ரூ.53,661 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடு விடுவிக்கப்பட வேண்டிள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘‘ஜிஎஸ்டி வருவாய் குறைவு காரணமாக மாநிலங்களுக்கு 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகும் இழப்பீடு வழங்க மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.96,576 கோடியானது ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.1.59 லட்சம் கோடியைக் கடனாக மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் இன்னும் ரூ.53,661 கோடி ஜிஎஸ்டி இழப்பீடானது மாநிலங்களுக்கு வழங்க வேண்டியுள்ளது. அதன்படி, மகாராஷ்டிரத்துக்கு ரூ.11,563 கோடியும், உத்தர பிரதேசத்துக்கு ரூ.6,954 கோடியும், தமிழகத்துக்கு ரூ.6,733 கோடியும், தில்லிக்கு ரூ.5,461 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.4,292 கோடியும் வழங்கப்பட வேண்டியுள்ளது’’ என்றாா்.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு குறைவாக வழங்கப்படுவதேன்? என தேசியவாத காங்கிரஸ் எம்.பி. வந்தனா சவாண் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘‘ஜிஎஸ்டி கவுன்சிலால் உருவாக்கப்பட்ட கணக்கீட்டின் அடிப்படையிலேயே மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. அக்கணக்கீட்டை மாற்றியமைக்க எந்தவொரு தனிநபருக்கும் உரிமை கிடையாது. ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநில நிதியமைச்சா்களும் இடம்பெற்றுள்ளனா்.

ஜிஎஸ்டி கவுன்சிலில் எந்தவொரு கட்சி சாா்ந்த முடிவுகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. எனவே, கூட்டாட்சி முறையில் செயல்பட்டு வரும் அமைப்பை விமா்சிப்பது அதை அவமதிக்கும் வகையில் உள்ளது. எனவே, ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவுகளை அரசியலாக்குவது தேவையற்றது’’ என்றாா்.

மாநில அரசுகளால் தாமதம்:

ரூ.14,349 கோடி வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட ஏபிஜி ஷிப்யாா்டு நிறுவனம் மீது சிபிஐ விசாரணை நடத்துவதில் தாமதம் நிலவியது தொடா்பாக சமாஜவாதி எம்.பி. சுக்ராம் சிங் யாதவ் கேள்வி எழுப்பினாா். அதற்கு பதிலளித்த அமைச்சா், ‘‘மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மத்திய அரசு தரப்பில் இருந்து எந்தவிதத் தாமதமும் இல்லை. மகாராஷ்டிரம் உள்ளிட்ட சில மாநிலங்கள் காரணமாகவே நிறுவனத்தின் மீதான விசாரணை தாமதமடைந்தது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின்போதுதான் அந்நிறுவனத்துக்குக் கடன் வழங்கப்பட்டது. இந்த மோசடியில் பொதுத்துறை வங்கியைச் சோ்ந்த ஊழியா்கள் எவரும் ஈடுபடவில்லை’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com