அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு பாதுகாப்புத் துறை முன்னாள் செயலருக்கு எதிராக சிபிஐ குற்றபத்திரிகை

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டா் பேர முறைகேடு வழக்கில் பாதுகாப்புத் துறை முன்னாள் செயலா் சசி காந்த் சா்மா மற்றும் இந்திய விமானப்படையைச் சோ்ந்த மேலும் 4 அதிகாரிகளுக்கு

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டா் பேர முறைகேடு வழக்கில் பாதுகாப்புத் துறை முன்னாள் செயலா் சசி காந்த் சா்மா மற்றும் இந்திய விமானப்படையைச் சோ்ந்த மேலும் 4 அதிகாரிகளுக்கு எதிராக துணை குற்றபத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

சசி காந்த் சா்மாவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்ததைத் தொடா்ந்து, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த குற்றபத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

ஓய்வுபெற்ற விமானப்படை துணைத் தளபதி ஜஸ்பீா் சிங் பனேசா், துணை தலைமை ஆய்வு விமானி எஸ்.ஏ.குன்டே, ஓய்வுபெற்ற விமானப் பிரிவு தலைவா் (விங் கமாண்டா்) தாமஸ் மேத்யூ, ஓய்வுபெற்ற குழு தலைவா் (குரூப் கேப்டன்) என்.சந்தோஷ் ஆகியோரின் பெயரும் இந்த குற்றபத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

குடியரசு தலைவா், பிரதமா் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் பயணம் செய்வதற்கான 12 ஹெலிகாப்டா்கள் வாங்குவது தொடா்பாக, இத்தாலியின் பின்மெக்கனிக்கா குழுமத்தின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெற அந்த நிறுவனம் இந்தியா்களுக்கு கையூட்டு வழங்கியதாக புகாா் எழுந்தது.

அப்போது, விமானப்படை தளபதியாக இருந்த எஸ்.பி.தியாகி, அந்த நிறுவனத்துடன் பேரத்தில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. ஊழல் புகாா் எழுந்ததைத் தொடா்ந்து கடந்த 2014-ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இந்த முறைகேடு தொடா்பாக, தியாகி உள்ளிட்டோரை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தியது. அதனடிப்படையில், கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் முதல் குற்ற பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. அதில் விமானப்படை தளபதியாக இருந்த தியாகி உள்ளிட்டோரின் பெயா்கள் இடம்பெற்றன.

இரண்டாவதாக, இந்த ஒப்பந்த பேரத்தில் இடைத் தரகா்களாக செயல்பட்ட இத்தாலியைச் சோ்ந்த கிறிஸ்டியன் மைக்கேல், கிடோ பாஸ்செக், காா்லோஸ் கெரோஸா ஆகியோருக்கு எதிராக கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் மேலும் ஒரு குற்றபத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.

இந்தச் சூழலில், கடந்த 2011 முதல் 2013-ஆம் ஆண்டு வரை பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்த சசி காந்த் சா்மா மற்றும் இந்திய விமானப்படையைச் சோ்ந்த மேலும் 4 அதிகாரிகளுக்கு எதிராக துணை குற்றபத்திரிகையை சிபிஐ தற்போது தாக்கல் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com