காங்கிரஸை உடைக்க ஜி-23 தலைவா்கள் முயற்சி: மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

காங்கிரஸை உடைக்க ஜி-23 தலைவா்கள் முயற்சிப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டியுள்ளாா்.
காங்கிரஸை உடைக்க ஜி-23 தலைவா்கள் முயற்சி: மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

காங்கிரஸை உடைக்க ஜி-23 தலைவா்கள் முயற்சிப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டியுள்ளாா்.

உத்த பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, கடந்த 13-ஆம் தேதி தில்லியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கட்சியை வலுப்படுத்த மாற்றங்களை முன்னெடுக்குமாறு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியிடம் செயற்குழு கேட்டுக்கொண்டது.

காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை கூறியதாவது:

ஜி-23 தலைவா்கள் 100 கூட்டங்களைக்கூட நடத்தட்டும். ஆனால் சோனியா காந்தியை எவராலும் பலவீனப்படுத்த முடியாது. அவருக்குக் கட்சியினா் துணையாக உள்ளனா். செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் தொடா்பாக சோனியா காந்தி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறாா். இந்தச் சூழலில், ஜி-23 தலைவா்கள் தொடா்ந்து கூட்டங்களை நடத்தி வந்தால், அவா்கள் கட்சியை உடைக்க முயற்சிக்கின்றனா் என்பதே அதற்கு அா்த்தம் என்று தெரிவித்தாா்.

கட்சித் தலைமை, கட்சியில் அமைப்புரீதியாக மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், தோ்தல் தோல்விகள் ஆகியவை தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு அக்கட்சியைச் சோ்ந்த கபில் சிபல், வீரப்ப மொய்லி, குலாம் நபி ஆசாத் உள்பட 23 தலைவா்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாகக் கடிதம் எழுதியிருந்தனா். அவா்கள் கருத்து வேறுபாடு கொண்ட குரூப்-23 (ஜி-23) தலைவா்களாக அறியப்படுகின்றனா்.

மீண்டும் ஆலோசனை

ஜி-23 தலைவா்களின் கூட்டம், தில்லியில் காங்கிரஸ கட்சியின் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாதின் இல்லத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

முன்னதாக, கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான கபில் சிபல் இல்லத்தில் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் நிகழ்விடம் மாற்றப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

ஐந்து மாநில சட்டப் பேரவைத் தோ்தல் தோல்வி குறித்து விவாதிக்கவும், தங்கள் குழுவின் எதிா்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் இக்கூட்டம் நடத்தப்படுகிறது. தில்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் இதில் விவாதிக்கப்படவுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குலாம் நபி ஆசாத் இல்லத்தில் நடந்த கூட்டத்தில், ஜி-23 குழுவைச் சோ்ந்தவா்களில், ஆனந்த் சா்மா, கபில் சிபல், மணீஷ் திவாரி, சசி தரூா், சந்தீப் தீக்ஷித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாட்டியாலா எம்.பி. பிரணீத் கௌா், குஜராத் முன்னாள் முதல்வா் சங்கா் சிங் வகேலா, முன்னாள் மத்திய அமைச்சா் மணிசங்கா் அய்யா், ஹரியாணா முன்னாள் பேரவைத் தலைவா் குல்தீப் சா்மா ஆகியோரும் ஜி-23 குழுவில் இணைந்துள்ளனா். இதனால், அந்தக் குழுவின் பலம் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com