‘லக்கிம்பூர் ஃபைல்ஸ் தயாரிக்கப்பட வேண்டும்’: அகிலேஷ் யாதவ் பதிலடி

காஷ்மீர் ஃபைல்ஸ் தயாரிக்க முடியுமென்றால் லக்கிம்பூர் ஃபைல்ஸ் திரைப்படத்தையும் தயாரிக்க வேண்டும் என சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

காஷ்மீர் ஃபைல்ஸ் தயாரிக்க முடியுமென்றால் லக்கிம்பூர் ஃபைல்ஸ் திரைப்படத்தையும் தயாரிக்க வேண்டும் என சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

1990-ன் தொடக்கத்தில், ஜம்மு-காஷ்மீரில் வசித்து வந்த பண்டிட் சமூகத்தினா் மீது நடந்த தாக்குதலும் அதனைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததையும் அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் காஷ்மீர் ஃபைல்ஸ். நடிகர்கள் அனுபம் கொ், தா்ஷன் குமாா், மிதுன் சக்கரவா்த்தி, பல்லவி ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தை இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கியுள்ளார்.

கடந்த மார்ச் 11ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படத்திற்கு பாஜக ஆளும் மாநில அரசுகள் வரிவிலக்குகளை அறிவித்து வருகின்றன. மேலும் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை வெகுவாக பாராட்டினார். 

இந்நிலையில் இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய  உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், “காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை தயாரிக்க முடியுமென்றால், லக்கிம்பூர் ஃபைல்ஸ் திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்றார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக, வேலையின்மை, பணவீக்கம், வளர்ச்சியின்மை உள்ளிட்ட கேள்விகளை எதிர்கொள்ளும் எனவும் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். 

முன்னதாக வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது பாஜக மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகளின் மீது வாகனத்தை ஏற்றியதில் 4 விவசாயிகள் பலியாகினர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com