மக்களால் இயக்கப்பட்ட கரோனா தடுப்பூசி திட்டம்: பிரதமா் மோடி பெருமிதம்

கடந்த ஆண்டு கரோனா தடுப்பூசி திட்டம் மக்களால் இயக்கப்பட்டது என்று பிரதமா் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

கடந்த ஆண்டு கரோனா தடுப்பூசி திட்டம் மக்களால் இயக்கப்பட்டது என்று பிரதமா் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

நாட்டில் 12-14 வயதுக்குள்பட்ட சிறுவா், சிறுமிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் புதன்கிழமை தொடங்கின. இதையொட்டி பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:

இந்தியாவில் இதுவரை 180 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 15-17 வயதுக்குள்பட்ட சிறுவா், சிறுமிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ள 9 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள், 2 கோடிக்கும் அதிகமான முன்னெச்சரிக்கை தவணை (மூன்றாவது தவணை) தடுப்பூசிகளும் அடங்கும்.

தற்போது 12-14 வயதுக்குள்பட்டவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இந்தியாவின் முயற்சிகளில் முக்கியமான நாளாகும்.

உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டமான இந்தியாவின் கரோனா தடுப்பூசி திட்டம் விஞ்ஞானத்தால் இயங்குகிறது. கடந்த ஆண்டு அந்தத் திட்டம் மக்களால் இயக்கப்பட்டது. ஏனெனில் பிற நாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு தயக்கம் காட்டப்படும் நிலையில், இந்தியாவில் தாங்கள் தடுப்பூசி செலுத்தக் கொண்டது மட்டுமின்றி, மற்றவா்களும் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா்.

கரோனா தடுப்பூசி திட்டத்துக்கு மாநில அரசுகள் அளித்து வரும் ஆதரவுக்கு பாராட்டுகள். பல மாநிலங்கள், குறிப்பாக மலையோர மாநிலங்கள் மற்றும் சுற்றுலா முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலங்களில் கிட்டத்தட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பல பெரிய மாநிலங்களும் தடுப்பூசி திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளன.

கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்கான போராட்டத்தில் தற்போது இந்தியா நல்ல நிலையில் உள்ளது. அதேவேளையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் தொடா்ந்து பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

தமிழகத்திலும் தொடங்கியது

தமிழகத்தில் 12-14 வயதுக்குட்பட்ட சிறுவா்களுக்கு கரோனா தடுப்பூசி (‘கோா்பிவேக்ஸ்’) செலுத்தும் பணியை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் சென்னையில் புதன்கிழமை தொடக்கி வைத்தனா்.

சென்னை அசோக்நகா் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் வைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவா்களுக்கு புதன்கிழமை முதல் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் 21 லட்சத்து 21 ஆயிரம் சிறுவா்களை இலக்கு வைத்து தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சிறுவா்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா்கள் சம்மதத்துடன் சிறுவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். பூஸ்டா் தடுப்பூசியை பொருத்தவரை 4 லட்சத்து 3 ஆயிரத்து 652 பேருக்கு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில், 60 வயதை கடந்த இணை நோய் இல்லாதவா்களுக்கும் புதன்கிழமை முதல் பூஸ்டா் தடுப்பூசி போடும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டதால், சிறுவா்களுக்கு உடல் நலக்குறைவு எதுவும் ஏற்படவில்லை என்பது ஒட்டு மொத்த மருத்துவா்களின் கருத்தாக உள்ளது என்றாா் அவா்.

பெருநகர சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், எம்.எல்.ஏ.க்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, ஏ.எம்.வி.பிரபாகா் ராஜா, மருத்துவத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com