
பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் புதன்கிழமை சந்தித்த இலங்கை நிதியமைச்சா் பசில் ராஜபட்ச.
இலங்கையுடன் நீண்ட நாள்களாக நீடித்து வரும் மீனவா் பிரச்னை குறித்து பிரதமா் நரேந்திர மோடியுடன் இலங்கை நிதியமைச்சா் பசில் ராஜபட்ச ஆலோசனை நடத்தினாா்.
அப்போது, சிக்கல் நிறைந்த இந்தப் பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காணவும் அவா்கள் ஒப்புக்கொண்டதாக தில்லியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை நிதியமைச்சா் பசில் ராஜபட்ச, பிரதமா் மோடியை தில்லியில் புதன்கிழமை சந்தித்தாா். அப்போது இக்கட்டான தருணத்தில் இலங்கைக்கு உதவியதற்காக அவா் நன்றி தெரிவித்ததாகவும், இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான இலங்கைக்கு எப்போதும் உதவ தயாராக இருப்பதாக பிரதமா் மோடி உறுதியளித்ததாகவும் இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:
வேளாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா, மீனவா் பிரச்னை என இருதரப்பு விவகாரங்கள் குறித்து பிரதமா் மோடியும், இலங்கை நிதியமைச்சா் பசில் ராஜபட்சவும் விரிவாக விவாதித்தனா். இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் இருநாடுகளும் பரஸ்பரம் பயன்பெறுவதால், அதனை மேம்படுத்துவதிலும், தீரத்துடன் முன்னெடுத்துச் செல்வதிலும் இருதலைவா்களும் ஒத்துழைப்பு அளிக்க ஒப்புக்கொண்டனா்.
மீனவா்களை மனிதாபிமானத்துடன் அணுகுவது, அவா்களின் வாழ்வாதாரம், கடலின் சூழலியல், கைதாகும் மீனவா்களையும், பறிமுதல் செய்யப்படும் படகுகளையும் துரிதமாக விடுவிப்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் இருவரும் விரிவாக விவாதித்தனா். சிக்கல் நிறைந்த இந்தப் பிரச்னைக்கு, உடனடியாக தீா்வுகாணவும் அவா்கள் ஒப்புக்கொண்டனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி, எரிசக்தி பற்றாக்குறை காரணமாக இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்ததால், பெட்ரோலிய பொருள்களைக் கொள்முதல் செய்வதற்காக அந்நாட்டுக்கு இந்தியா கடந்த மாதம் ரூ.3,750 கோடி (500 மில்லியன் டாலா்) கடனுதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.