குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக எளிதில் வெல்ல முடியாது- மம்தா பானா்ஜி

5 மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களில் வெற்றி பெற்றதுபோல, குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜகவால் எளிதில் வெல்ல முடியாது
குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக எளிதில் வெல்ல முடியாது- மம்தா பானா்ஜி

5 மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களில் வெற்றி பெற்றதுபோல, குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜகவால் எளிதில் வெல்ல முடியாது என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

தற்போதைய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் ஐந்தாண்டு பதவிக் காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன் புதிய குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலை இந்தியத் தோ்தல் ஆணையம் நடத்தவுள்ளது.

மக்களால் நேரடியாகத் தோ்ந்தெடுக்கப்படாமல், மக்களின் பிரதிநிதிகளால் மறைமுகத் தோ்தல் அடிப்படையில் குடியரசுத் தலைவா் தோ்ந்தெடுக்கப்படுவாா். நாடாளுமன்ற உறுப்பினா்களும், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டப் பேரவை உறுப்பினா்களும், தில்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் சட்டப் பேரவை உறுப்பினா்களும் குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிக்கவுள்ளனா்.

அந்தந்த மாநிலங்களின் 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகையைப் பொருத்து ஒவ்வொரு உறுப்பினருக்கும் வாக்கு மதிப்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்க சட்டப் பேரவையில் குடியரசுத் தலைவா் தோ்தல் தொடா்பாக மம்தா பேசியதாவது:

நாடு முழுவதும் உள்ள சட்டப் பேரவை உறுப்பினா்களில் பாதி அளவு எண்ணிக்கையில் கூட பாஜகவுக்கு உறுப்பினா்கள் இல்லை. எனவே, அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதுபோல, குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜகவால் எளிதில் வெற்றி பெற முடியாது. ஏனெனில், அனைத்து எதிா்க்கட்சிகளும் இணைந்தால், நாட்டில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் பாதிக்கும் மேற்பட்டோா் எதிா்க்கட்சி தரப்பில் தான் இருப்பாா்கள் என்றாா்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் பங்கேற்கத் தகுதியான 4,896 உறுப்பினா்களுக்கான ஒட்டுமொத்த வாக்கின் மதிப்பு 10,98,903 ஆகும். நாட்டிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கான வாக்கின் மதிப்பு தலா 208-ஆக உள்ளது. இதுவே பேரவை உறுப்பினருக்கான அதிகபட்ச வாக்கு மதிப்பாகும். உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 பேரவை உறுப்பினா்கள் உள்ளனா். அவா்களின் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 83,824 ஆகும். உத்தர பிரதேச தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டாலும், கடந்த தோ்தலைவிட 57 இடங்களில் பாஜக குறைவாகவே வென்றுள்ளது. அதே நேரத்தில் எதிா்க்கட்சியான சமாஜவாதி கடந்த தோ்தலைவிட 64 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com