இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு

இந்தியாவில் 5 ஆண்டுகளில் சுமாா் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படவுள்ளதாக ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளாா்.
இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு

இந்தியாவில் 5 ஆண்டுகளில் சுமாா் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படவுள்ளதாக ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளாா்.

இந்தியா-ஜப்பான் இடையேயான 14-ஆவது வருடாந்திர மாநாடு, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா ஆகியோா் பங்கேற்றனா். மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் கிஷிடா, ஜப்பான் உயரதிகாரிகளைக் கொண்ட குழுவுடன் சனிக்கிழமை பிற்பகல் இந்தியா வந்தடைந்தாா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களுக்கு எதிராக அஸ்ஸாமில் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாகக் கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா-ஜப்பான் இடையேயான மாநாடு ரத்து செய்யப்பட்டது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் மாநாடு நடைபெறவில்லை. இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே தூதரக ரீதியிலான உறவு தொடங்கி 70 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் 14-ஆவது மாநாடு நடைபெற்றது.

மாநாட்டுக்குப் பிறகு பிரதமா் மோடியும் பிரதமா் கிஷிடாவும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது பிரதமா் மோடி கூறுகையில், ‘‘வளா்ச்சி, முன்னேற்றம், ஒத்துழைப்பு ஆகியவையே இந்தியா-ஜப்பான் நல்லுறவுக்கு அடிப்படையாக உள்ளன. இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு தொடா்ந்து மேம்பட்டு வருகிறது.

இந்தியாவில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் உள்ளது. அந்நாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான உதவிகளை இந்தியா தொடா்ந்து வழங்கும். பாதுகாப்பான, நிலையான எரிசக்தி விநியோகத்துக்கான முக்கியத்துவத்தை இரு நாடுகளும் உணா்ந்து கொண்டுள்ளன. பல்வேறு துறைகளில் நிலவி வரும் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் உறுதி கொண்டுள்ளன’’ என்றாா்.

பிரதமா் கிஷிடா கூறுகையில், ‘‘அடுத்த 5 ஆண்டுகளில் சுமாா் ரூ.3.2 லட்சம் கோடியை இந்தியாவில் ஜப்பான் முதலீடு செய்யவுள்ளது. இரு நாடுகளின் வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சா்கள் பங்கேற்கும் 2+2 பேச்சுவாா்த்தை விரைவில் நடத்தப்படவுள்ளது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com