
கோப்புப்படம் (படம்: ட்விட்டர்)
மகாராஷ்டிரத்தில் சிவசேனையுடனான மகாராஷ்டிர வளர்ச்சி முன்னணி கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் கூட்டணி வைக்கத் தயார் என அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இதஹதுல்-முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் மகாராஷ்டிர பிரிவுத் தலைவர் இம்தியாஸ் ஜலீல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான ராஜேஷ் தோப் வெள்ளிக்கிழமை இம்தியாஸ் ஜலீலை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் ஜலீல் கூறியதாவது:
"எங்கள் கட்சியினாலே பாஜக வெற்றி பெறுவதாக எப்போதும் குற்றம்சாட்டப்படுகிறது (முஸ்லிம் வாக்குகள் பிரிவதால்). இந்தக் குற்றசாட்டு தவறானது என்பதை நிரூபிப்பதற்காக கூட்டணிக்குத் தயார் என தோப்பிடம் முன்வைத்தேன். எனினும், அதுபற்றி என்னிடம் தோப் எதுவும் கூறவில்லை.
இதையும் படிக்க | பஞ்சாபில் இரண்டு மருத்துவர்கள் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
இது ஏஐஎம்ஐஎம் மீதான வெறும் குற்றச்சாட்டா அல்லது எங்களுடன் கூட்டணி வைக்க அவர்கள் (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) தயாராக உள்ளனரா என்பதைத் தற்போது பார்க்க வேண்டும்."
ஏஐஎம்ஐஎம் முன்மொழிதலில் சிவசேனை நிலைப்பாடு குறித்த கேட்கப்பட்டதற்கு அவர் நேரடியாகப் பதில் கூற மறுத்துவிட்டார்.
"தங்களால் முடிந்த சேதத்தை பாஜக செய்துவிட்டது. அவர்களை வீழ்த்த அனைத்தையும் செய்ய நாங்கள் தயார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களுக்கு முஸ்லிம் வாக்குகள் மட்டுமே வேண்டும். ஆனால், கட்சிக்குத் தலைமை தாங்கும் அசாதுதீன் ஒவைசி வேண்டாம்.
மகாராஷ்டிரத்திலும், இந்தக் கட்சிகளுக்கு (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) முஸ்லிம் வாக்குகள் தேவைப்படுகிறது. ஆனால், ஏஐஎம்ஐஎம் தேவையில்லை. பாஜகவின் வெற்றிக்கு எங்களைக் காரணம் கூறுகின்றனர். அப்படியென்றால், சேர்ந்தே தேர்தலை எதிர்கொள்வோம் என நான் முன்வைத்தேன்" என்றார் ஜலீல்.
2019 மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது.