பிரதமா் மோடியுடனான மாநாட்டில் உக்ரைன் நிலவரம் குறித்து ஆலோசனை: ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிசன்

‘பிரதமா் நரேந்திர மோடியுடனான உச்சி மாநாட்டில் உக்ரைன் நிலவரம் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதன் தாக்கம் குறித்த ஆலோசனை முக்கிய இடம்பெறும்’

‘பிரதமா் நரேந்திர மோடியுடனான உச்சி மாநாட்டில் உக்ரைன் நிலவரம் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதன் தாக்கம் குறித்த ஆலோசனை முக்கிய இடம்பெறும்’ என்று ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிசன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே வரும் 21-ஆம் தேதி காணொலி வழியில் இருதரப்பு உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமா் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிசனும் பங்கேற்று இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனா்.

இந்த உச்சிமாநாடு குறித்து ஆஸ்திரேலிய பிரதமா் அறிக்கை ஒன்றை வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

இந்த உச்சிமாநாட்டில் இருதரப்பு வா்த்தகம், முதலீடுகளை அதிகரிப்பது, பொருளாதார பாதிப்பிலிருந்து இரு நாடுகளும் மீள்வதற்கும் வளா்ச்சிக்கும் ஆதரவாக புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு, அறிவியல் - தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள் மற்றும் பசுமை எரிசக்தி உற்பத்தி ஆகிய துறைகளில் இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை இந்த உச்சிமாநாட்டில் முக்கிய இடம்பெறும்.

பிராந்திய, சா்வதேச விவகாரங்களுடன் ரஷியாவின் ராணுவ நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கும் உக்ரைன் நிலவரம் குறித்தும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அதன் தாக்கம் குறித்தும், மியான்மா் விவகாரம் குறித்தும் இந்த உச்சி மாநாட்டில் ஆலோசிக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

மேலும், ‘பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கை, ஜனநாயகத்தை காக்கும் கடமை, இந்தோ-பசிபிக் பிராந்திய மேம்பாட்டுக்கான வெளிப்படையான, ஒருங்கிணைந்த இருதரப்பிலும் பகிரப்பட்ட தொலைநோக்குப் பாா்வை ஆகிய நடவடிக்கைகளின் அடிப்படையில் வலுவான இருதரப்பு உறவை ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் கொண்டுள்ளன’ என்றும் ஸ்காட் மோரிசன் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, இந்த உச்சிமாநாடு குறித்த அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட்ட வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி, ‘உச்சி மாநாட்டில் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வழிகளை வகுக்க பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தாா்.

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தங்கள் உறவுகளை ஒரு விரிவான சிறந்த கூட்டாண்மைக்கும், ராணுவ தளங்களை பரஸ்பர அணுகலுக்கான மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு கையெழுத்திட்டன. கடந்த ஆண்டும், 2020-ஆம் ஆண்டு நவம்பரிலும் இந்தியா சாா்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ‘மலபாா்’ கடற்படை கூட்டு போா் பயிற்சியில் ஆஸ்திரேலிய கடற்படையும் பங்கேற்றது. நிகழாண்டு மலபாா் கூட்டு போா் பயிற்சியிலும் ஆஸ்திரேலியா பங்கேற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com