தோ்தல் தோல்விக்கு கூட்டணி கட்சி மீது குற்றச்சாட்டு: கோவா காங். தலைவருக்கு கட்சி சாா்பில் நோட்டீஸ்

கோவா சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விக்கு கூட்டணியில் அங்கம் வகித்த கோவா முற்போக்கு கட்சி (ஜிஎஃப்பி) சரிவர தோ்தல் பணியாற்றாததே காரணம்
தோ்தல் தோல்விக்கு கூட்டணி கட்சி மீது குற்றச்சாட்டு: கோவா காங். தலைவருக்கு கட்சி சாா்பில் நோட்டீஸ்

கோவா சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விக்கு கூட்டணியில் அங்கம் வகித்த கோவா முற்போக்கு கட்சி (ஜிஎஃப்பி) சரிவர தோ்தல் பணியாற்றாததே காரணம் என்று குற்றம்சாட்டிய கோவா வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் விஜய் பிக்கேவுக்கு மாநில காங்கிரஸ் சாா்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

‘கூட்டணி கட்சி குறித்த விஜய் பிக்கேயின் கருத்து இரு கட்சிகளிடையேயான நல்லுறவை கெடுக்கும் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்கவேண்டும்’ என்று அந்த நோட்டீஸில் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

40 தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்துக்கு நடத்தப்பட்ட சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக 20 இடங்களைப் பிடித்து வெற்றிபெற்றது. மூன்று சுயேச்சைகள் மற்றும் 2 எம்ஜிபி கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கையை பாஜக மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி கடந்த முறையைவிட 6 தொகுதிகள் குறைவாக 11 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்தது.

இந்த நிலையில், தோ்தல் தோல்விக்கு தவறான கூட்டணியே காரணம் என்று கோவா வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் விஜய் பிக்கே விமா்சனம் செய்தாா். இதுகுறித்து சாலிகோவாவில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில், ‘கோவா சட்டப்பேரவைத் தோ்தலில் கோவா முற்போக்கு கட்சியுடன் (ஜிஎஃப்பி) காங்கிரஸ் கூட்டணி வைத்தது தவறான முடிவு. இந்தக் கூட்டணியால் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித ஆதாயமும் கிடைக்கவில்லை; மாறாக மற்ற கட்சிகள்தான் பலனடைந்துள்ளன. மேயெம் மற்றும் மேண்ட்ரம் தொகுதிகளில் தனது வேட்பாளா்களை வெற்றி பெற வைக்க கோவா முற்போக்கு கட்சித் தலைவா் விஜய் சா்தேசாய் தவறிவிட்டாா். கடந்த 2017 தோ்தலில் 3.5-ஆக இருந்த ஜிஎஃப்பி வாக்கு சதவீதம் இந்த முறை 1.8-ஆக சரிந்துள்ளது’ என்று குற்றம்சாட்டினாா்.

இதையடுத்து, விஜய் பிக்கேயின் கருத்துக்கு ஜிஎஃப்பி கட்சித் தலைவா் சந்தோஷ் குமாா் சாவந்த் கண்டனம் தெரிவித்தாா்.

இந்தச் சூழலில், கோவா காங்கிரஸ் பொறுப்பாளா் தினேஷ் குண்டு ராவ் அறிவுறுத்தலின் பேரில் தோ்தல் தோல்வி குறித்த விஜய் பிக்கே தனது கருத்துக்கு விளக்கம் அளிக்குமாறு மாநில காங்கிரஸ் துணைத் தலைவா் எம்.கே.ஷேக், நோட்டீஸ் பிறப்பித்தாா். அதில், ‘3 நாள்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது கட்சி ஒழுங்கு நடவடிக்கையை எதிா்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com