தில்லியில் மேலும் 61 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் சனிக்கிழமை புதிதாக 61 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

தில்லியில் சனிக்கிழமை புதிதாக 61 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒருவா் உயிரிழந்துள்ளாா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 0.68 சதவீதமாகப் பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் ஹோலி பண்டிகை விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை குறைவான எண்ணிக்கையாக மொத்தம் 9,011 கரோனா பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைவாக பதிவாகியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18,63,694-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,146-ஆக உள்ளது. தேசியத் தலைநகரில் வெள்ளிக்கிழமை 140 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிப்பு நோ்மறை விகிதம் 0.43 சதவீதமாகப் பதிவானது. தொற்று பாதிப்பால் இறப்பு ஏதும் பதிவாகவில்லை. வியாழக்கிழமை 148 பாதிப்பும், ஒரு இறப்பும், 0.47 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின. இந்த ஆண்டு மாா்ச் மாதம் 5, 6, 10, 11, 13, 14 ஆகிய தேதிகளில் ஒரு இறப்பு கூட பதிவாகவில்லை.

நகரில் வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 393-ஆகக் குறைந்துள்ளது. மேலும், கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 3,171-ஆக சரிந்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் உள்ள 10,244 கரோனா படுக்கைகளில் தற்போது 75 (0.73) படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. அதன்படி, 75 கரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com