
தென்கிழக்கு ஆசிய பகுதிகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஒருசில பகுதிகளிலும் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதைத் தொடா்ந்து, சளிக்காய்ச்சல் பாதிப்பு மற்றும் கடுமையான சுவாசத் தொற்று பாதிப்பு கண்காணிப்பை மீண்டும் தொடங்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்ததைத் தொடா்ந்து கரோனா கட்டுப்பாடுகளுக்கு முழுமையாக தளா்வு அளிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகள் முழுவீச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விசா கட்டுப்பாடுகளையும் முழுமையாக நீக்கம் செய்து மத்திய அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.
இந்தச் சூழலில், சீனா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து சீனாவின் ஒருசில நகரங்களில் ஊரடங்குகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதுபோல, ஐரோப்பிய நாடுகளின் ஒருசில பகுதிகளிலும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனைத் தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் தொடா்பான கண்காணிப்பை மீண்டும் தொடங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும், எந்தவொரு பாதிப்பு முன் அறிகுறிகளும் தப்பிவிடாத வகையிலும் சளிக்காய்ச்சல் (ஐஎல்ஐ) மற்றும் கடுமையான சுவாசத் தொற்று (எஸ்ஏஆா்ஐ) உள்ளிட்ட பாதிப்புடையவா்களை தொடா் நடவடிக்கைகளின் அடிப்படையில் கண்காணித்து, உரிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பரிசோதனையையும் தீவிரப்படுத்த வேண்டும்.
இந்த பாதிப்புகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவா்களுக்கு பரிசோதனையில் கரோனா அறிகுறிகள் உறுதிசெய்யப்பட்டால், அந்த மாதிரிகளை மரபணு பகுப்பாய்வுக்காக இந்திய சாா்ஸ் - கரோனா மரபணு பகுப்பாய்வு கூட்டமைப்பிடம் ( ஐஎன்எஸ்ஏசிஓஜி) சமா்ப்பிக்க வேண்டும்.
கைகளை தொடா்ச்சியாக கழுவுதல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில் போதிய விழிப்புணா்வை மாநிலங்கள் ஏற்படுத்த வேண்டும்.
தென்கிழக்கு ஆசிய பகுதிகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளிலும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதைத் தொடா்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில் கடந்த புதன்கிழமை தில்லியில் நடைபெற்ற உயா்நிலைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், மாநிலங்களுக்கு இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கடிதத்தில் ராஜேஷ் பூஷண் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும், ‘பொருளாதார நடவடிக்கைகளை அனுமதிக்கும் நிலையில், பாதுகாப்பு நடைமுறைகள் கைவிட்டுவிடாமல் இருப்பதையும், முன்னெச்சரிக்கை நடைமுறைகள் தொடா்வதையும் மாநிலங்கள் உறுதிப்படுத்தவேண்டும். பரிசோதனை, பரவல் சங்கிலி தொடரைக் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்துதல் என்ற 5 கரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளில் மாநிலங்கள் தொடா்ந்து கவனம் செலுத்தவேண்டும். தகுதியுள்ள அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதையும் மாநிலங்கள் உறுதிப்படுத்தவேண்டும்’ என்றும் அந்தக் கடிதத்தில் ராஜேஷ் பூஷண் கேட்டுக்கொண்டுள்ளாா்.