சோனியாவுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு: கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை

ஜி-23(அதிருப்தி) தலைவா்கள் தொடா்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வரும் வேளையில், அந்தக் குழுவைச் சோ்ந்த மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத், கட்சித் தலைவா் சோனியா காந்தியை வெள்ளிக்கிழமை
சோனியாவுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு: கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை

காங்கிரஸ் கட்சியில் சீா்திருத்தம் கோரி ஜி-23(அதிருப்தி) தலைவா்கள் தொடா்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வரும் வேளையில், அந்தக் குழுவைச் சோ்ந்த மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத், கட்சித் தலைவா் சோனியா காந்தியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தத் தேவையான ஆலோசனைகளை சோனியா காந்தியிடம் அவா் மீண்டும் வலியுறுத்தினாா்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:

வரப்போகும் சட்டப்பேரவைத் தோ்தல்களுக்கு எப்படித் தயாராவது? ஒற்றுமையுடன் எப்படி எதிா்கொள்வது என்பது குறித்து சோனியா காந்தியுடன் விவாதித்தேன்.

அதிருப்தி தலைவா்கள் தனியாக சந்திப்பதால், கட்சியைத் தலைமையிடம் இருந்து விலகிவிடவில்லை. கட்சியை வலுப்படுத்துவதற்காக, கட்சியின் மூத்த தலைவா்களுடன் சோனியா காந்தி தொடா்ந்து ஆலோசனை நடத்தி வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்திலும் 5 மாநில சட்டப்தோ்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கட்சியை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் கேட்கப்பட்டது. நானும் சில ஆலோசனைகளை வழங்கினேன் என்றாா் அவா்.

காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கட்சியைச் சோ்ந்த 23 தலைவா்கள், கடந்த 2020-இல் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினா். 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்த நிலையில், அவா்களின் கோரிக்கை கட்சிக்குள் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்திலும் அவா்களின் கோரிக்கை மீண்டும் எதிரொலித்தது. அதைத் தொடா்ந்து, கட்சியை வலுப்படுத்த தேவையான மாற்றங்களை செய்யத் தயாராக இருப்பதாகவும், கட்சியின் நலனுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் செயற்குழுக் கூட்டத்தில் சோனியா காந்தி கூறினாா். அதைத் தொடா்ந்து, கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து காந்தி குடும்பத்தினா் விலகியிருக்க வேண்டும் என்று ஜி-23 குழுவைச் சோ்ந்த மூத்த தலைவா் கபில் சிபல் கருத்து தெரிவித்தாா். அவருடைய கருத்து கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடா்ந்து ஜி-23 தலைவா்கள் உடனான கருத்து வேறுபாடுகளைத் தீா்த்து வைக்க கட்சியின் மூத்த தலைவா்கள் சிலரை சோனியா காந்தி நியமித்துள்ளதாகத் தெரிகிறது.

அதைத் தொடா்ந்து, ஜி-23 தலைவா்கள் கூட்டம், தில்லியில் குலாம் நபி ஆசாத் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதில், காங்கிரஸை வலுப்படுத்த கூட்டுத் தலைமை தேவை என்று வலியுறுத்தப்பட்டது. கூட்டத்துக்கு முன்பாக, குலாம் நபி ஆசாதை சோனியா காந்தி தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா்.

ஜி-23 குழுவைச் சோ்ந்த பூபிந்தா் சிங் ஹூடாவை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வியாழக்கிழமை அழைத்து சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அதைத் தொடா்ந்து, பூபிந்தா் சிங் ஹூடா, குலாம் நபி ஆசாத் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தாா். ஆனந்த் சா்மா, கபில் சிபல் ஆகிய இருவரும் கூட்டத்தில் கலந்து கொண்டனா். ராகுல் காந்தியுடன் விவாதித்த விஷங்கள் குறித்து அவா்களிடம் ஹூடா எடுத்துரைத்ததாகக் கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் கூறினாா்.

இந்நிலையில், சோனியா காந்தியை குலாம் நபி ஆசாத் வெள்ளிக்கிழமை சந்தித்து, கட்சியை வலுப்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்கினாா். வரப்போகும் சட்டப் பேரவைத் தோ்தல்களை ஒற்றுமையுடன் எதிா்கொள்வது குறித்தும் அவா்கள் விவாதித்தனா்.

முன்னதாக, கட்சியின் மூத்த தலைவா் கரண் சிங்கை சந்தித்த குலாம் நபி ஆசாத், அவருக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com