
கோப்புப்படம்
கடந்த ஐந்தாண்டுகளாக மகாராஷ்டிரம் புணேவில் சிறுமி ஒருவரை அவரது தந்தையும் சகோதரருமே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, அதே காலக்கட்டத்தில் சிறுமியின் தாத்தா மற்றும் மாமா அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதை உறுதி செய்துள்ள காவல்துறையினர், பாலியல் வன்கொடுமை , பாலியல் தொல்லை என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருப்பினும், இதில் எந்த வித கைது நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
இதுகுறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "புணேவில் உள்ள காவல்நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376இன் கீழ் சகோதரர், 45 வயதான தந்தை ஆகியோருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
60 வயது மதிக்கத்தக்க அவரது தாத்தா மற்றும் 25 வயது மதிக்கத்தக்க தூரத்து உறவான அவரது மாமாவுக்கு எதிராக பிரிவு 354இன் கீழ் மானபங்கப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த சிறுமிக்கு தற்போது 11 வயதாகிறது. சிறுமி மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் பிகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். தற்போது, புணேவில் வசித்துவருகின்றனர்" என்றார்.
இதையும் படிக்க | மின்னல் பாய்ந்து இத்தனை பேர் பலியா? அதிர வைக்கும் அரசு தரவு
இதுகுறித்து விரிவாக பேசிய காவல்துறை ஆய்வாளர் அஸ்வினி சத்புதே, "நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றிய கருத்தரங்கின்போது தனக்கு நேர்ந்ததை சிறுமி பகிர்ந்து கொண்டபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு, பிகாரில் வசித்திருந்தபோது சிறுமியை அவரது தந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க தொடங்கியிருக்கிறார்.
பின்னர், கடந்த 2020இல் நவம்பர் மாதம், சிறுமியை அவரது சகோதரர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க தொடங்கியிருக்கிறார். தாத்தாவும் தூரத்து சொந்தமான மாமாவும் தகாத இடங்களில் தொட்டுள்ளனர். இந்த சம்பவம் தனித்தனியாக நடைபெற்று வந்துள்ளதால் ஒருவர் செய்திருப்பது மற்றவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். இது கூட்டு பாலியல் வன்கொடுமை அல்ல. போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது" என்றார்.