
மகன், மருமகள், பேத்திகளை வீட்டோடு எரித்துக் கொன்ற முதியவர்
இடுக்கி: தனது மகன், மருமகள், இரண்டு பேத்திகளை வீட்டுக்குள் வைத்து வெளியே பூட்டிவிட்டு வீட்டுக்கு தீ வைத்து நால்வரையும் கொலை செய்த கொடூரச் சம்பவம் கேரளத்தில் நடந்துள்ளது.
கேரள மாநிலம் தொடுபுழா மாவட்டம் சீனிகுழி என்ற பகுதியில் சனிக்கிழமை நடந்திருக்கும் இந்த கோர சம்பவம் பலரையும் உலுக்கியுள்ளது.
இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட சீனிகுழியைச் சேர்ந்த ஹமீத் (79) என்பவரை அக்கம் பக்கத்தினர் பிடித்து தொடுபுழா காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தீயில் கருகி பலியான மொஹம்மது ஃபைசல் (49), அவரது மனைவி ஷீபா (39), மகள்கள் மீரு (16), அஸ்னா (13) ஆகியோரது உடல்கள் மாவட்ட மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சொத்துத் தகராறில் இந்த சம்பவம் நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், ஹமீது வெளியே இருந்து மகன் உள்ளிட்டோர் படுக்கையறைக்கு வந்துவிட்டதை உறுதி செய்து கொண்டு, பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததோடு, வீட்டை வெளியே இருந்தும் பூட்டிவிட்டார். அதுமட்டுமல்லாமல், வீட்டில் மாடியிலிருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இல்லாமல் காலிசெய்துவிட்டிருந்தார் என்பது பிறகு தெரிய வந்தது.
பைசலின் கூக்குரல் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினரையும், ஹமீது தீ வைத்து விடுவதாக மிரட்டியுள்ளார். சிலர் காவலர்களுக்கு தகவல் கொடுத்து அவர்கள் வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டிருந்தது என்கிறார்கள்.
ஹமீத் பல ஆண்டு காலமாக தனது இரண்டாவது மனைவியுடன் வேறொரு இடத்தில் வாழ்ந்து வந்துள்ளார். தற்போது இரண்டாவது மனைவியும் ஹமீதை விரட்டிவிட்டதால், அவர் மீண்டும் இந்த வீட்டுக்கு வந்து பைஸலுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
பைஸலுக்கு குடும்பச் சொத்தை பிரித்துக் கொடுப்பதில் பல ஆண்டு காலமாக சொத்துத் தகராறு இருந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மசூதி நிர்வாகிகள் தலையிட்டு இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டிருந்தனர். ஆனால் அதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது.
திட்டமிட்ட படுகொலை
வெள்ளிக்கிழமை இரவு, பைஸல் உள்ளிட்ட நால்வரும் படுக்கையறைக்குச் சென்ற பிறகு, ஹமீது அறைக் கதவை வெளியிலிருந்து பூட்டியுள்ளார். தண்ணீர் தொட்டியை காலி செய்திருக்கிறார். மின் இணைப்புகளையும் துண்டித்துள்ளார். பிறகு, பைஸல் படுத்திருந்த அறையின் ஜன்னலை திறந்து அதற்குள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
அறைக்குள் தீப்பற்றியதம் அக்கம் பக்கத்தினரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்துள்ளார் ஃபைஸல். ஆனால் வாசலில் நின்று கொண்டிருந்த ஹமீது, யாரையும் வீட்டை நெருங்கவிடாமல் மிரட்டியுள்ளார்.
படுக்கையறைக்குள் இருந்த கழிப்பறையிலிருந்து தண்ணீரைப் பிடித்து தீயை அணைக்க ஃபைஸல் குடும்பத்தினர் முயன்ற போதுதான், குழாயில் தண்ணீர் வராதது தெரிய வந்தது.
தீ மளமளவென அறை முழுக்க பரவி, நால்வரும் தீயில் கருகி பலியாகினர். பிறகு தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்து உடல்களை மீட்டுள்ளனர்.