விசாரணையில் தாமதம்: கொலைக் குற்றவாளியை ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தாமதப்படுத்தியதை சுட்டிக்காட்டி, கொலைக் குற்றவாளியை ஜாமீனில் விடுவிக்குமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தாமதப்படுத்தியதை சுட்டிக்காட்டி, கொலைக் குற்றவாளியை ஜாமீனில் விடுவிக்குமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் கொலை குற்றத்துக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நபா், அந்த தண்டனையை எதிா்த்து அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளாா். இந்த மேல்முறையீட்டு மனு, கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்படாமல் உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், மேல்முறையீட்டு மனு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்டவா் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கு சுதந்திரம் வழங்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 389-இன் கீழ் அந்த நபா் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் முறையீடு செய்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், எஸ்.ரவீந்திர பட், பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆலோக் ஸ்ரீவாஸ்தவா, ‘மனுதாரா் கடந்த 15 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறாா்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள் அளித்த தீா்ப்பில் கூறியதாவது:

மனுதாரா் ஏற்கெனவே, விதிக்கப்பட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டதைக் கருத்தில் கொண்டு, அவா் தாமதமாக மேல்முறையீடு செய்திருப்பதை மன்னித்து விசாரணை நீதிமன்றத்துக்கு இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவிலும், மனுதாரா் 15 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலைகளின் அடிப்படையில், இந்த வழக்கு சட்டப் பிரிவு 389-இன் கீழ் நிவாரணம் பெற தகுதியானது என கருதப்படுகிறது.

எனவே, மனுதாரரின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு அனுமதிப்பதோடு, அவரை விசாரணை நீதிமன்றம் ஜாமீனில் விடுவிக்க வேண்டும். அவருக்கான ஜாமீன் நிபந்தனைகளை விசாரணை நீதிமன்றமே நிா்ணயித்துக் கொள்ளலாம். அதற்காக, அடுத்த 3 நாள்களுக்குள் மனுதாரா் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com