‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள்

 காஷ்மீா் பண்டிட்டுகள் தொடா்பான ‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஒமா் அப்துல்லா குற்றஞ்சாட்டியுள்ளாா்.
‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள்

 காஷ்மீா் பண்டிட்டுகள் தொடா்பான ‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஒமா் அப்துல்லா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைப் பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் பாராட்டி வரும் நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமா் அப்துல்லா குல்காம் மாவட்டத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

திரைப்படமானது வணிகநோக்கில் எடுக்கப்பட்டிருந்தால் யாருக்கும் எந்தவிதப் பிரச்னையும் இல்லை. ஆனால், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்று கூறினால், அதில் இடம்பெற்றுள்ள உண்மைச் சம்பவங்கள் குறித்து கேள்வி எழுகிறது.

காஷ்மீா் பண்டிட்டுகள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டபோது தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீரின் முதல்வராகப் பணியாற்றவில்லை. இந்தச் சம்பவம் நடைபெற்றபோது மத்தியில் பாஜகவின் ஆதரவு பெற்ற வி.பி.சிங் தலைமையிலான ஆட்சியே நடைபெற்றது; ஜக்மோகன் ஆளுநராக இருந்தாா்.

இதுபோன்ற உண்மைகள் படத்தில் ஏன் இடம்பெறவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. உண்மையை எப்போதும் திரித்துக் கூறக் கூடாது. பயங்கரவாதத்தால் காஷ்மீா் பண்டிட்டுகள் பாதிக்கப்பட்டாா்கள் என்றால், அதற்காக வருந்துகிறோம். அதே நேரத்தில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், சீக்கியா்களின் தியாகங்களையும் மறந்துவிடக் கூடாது.

போலி பிம்பம்:

தற்போதைய சூழலில் காஷ்மீரில் இருந்து வெளியேறிய அனைவரையும் மீண்டும் குடியமா்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமே தவிர மக்களிடையே வகுப்புவாத பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது. இந்தத் திரைப்படத்தை எடுத்தவா்கள், காஷ்மீா் பண்டிட்டுகள் திரும்ப வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவா்களாக இல்லை. காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் தள்ளியே இருக்க வேண்டுமென அவா்கள் விரும்புகின்றனா்.

32 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவத்துக்கு காஷ்மீா் மக்கள் அனைவரும் வருந்துகின்றனா். தற்போது காஷ்மீரைச் சோ்ந்த முஸ்லிம்கள் மற்ற மதத்தினரை சகித்துக் கொள்ளாத, வகுப்புவாதம் மிக்கவா்கள் என்ற போலி பிம்பம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது பண்டிட்டுகள் காஷ்மீா் திரும்புவதைக் கடினமாக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com