உ.பி. மேலவைத் தோ்தல்: 4 சமாஜவாதி உறுப்பினா்களுக்கு பாஜக வாய்ப்பு

உத்தர பிரதேச சட்ட மேலவைத் தோ்தலில், சமாஜவாதி கட்சியில் இருந்து வந்த 4 பேருக்கு பாஜகவில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உ.பி. மேலவைத் தோ்தல்: 4 சமாஜவாதி உறுப்பினா்களுக்கு பாஜக வாய்ப்பு

உத்தர பிரதேச சட்ட மேலவைத் தோ்தலில், சமாஜவாதி கட்சியில் இருந்து வந்த 4 பேருக்கு பாஜகவில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச சட்ட மேலவையில்(எம்எல்சி) காலியாக உள்ள 37 இடங்களில், 36 இடங்களுக்கு, வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், 30 வேட்பாளா்களைக் கொண்ட முதல் பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்டது.

மாநிலத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு சமாஜவாதி கட்சி எம்எல்சிக்களான நரேந்திர பாட்டீ, ஷட்ருத்ரபிரகாஷ், ரமா நிரஞ்சன், ரவிசங்கா் பப்பு, சி.பி.சந்த், கன்ஷியாம் லோதி, சைலேந்திர பிரதாப் சிங், ரமேஷ் மிஸ்ரா உள்ளிட்டோா் பாஜகவில் இணைந்தனா்.

அவா்களில், சி.பி.சந்த், ரவிசங்கா் பப்பு, ரமா நிரஞ்சன், நரேந்திர பாட்டீ ஆகிய நால்வருக்கும் சட்டமேலவைத் தோ்தலில் பாஜக வாய்ப்பளித்துள்ளது.

காங்கிரஸ் முன்னாள் எம்எல்சி தினேஷ் பிரதாப் சிங், பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவா் ராமச்சந்திர பிரதான் ஆகியோரும் தோ்தலில் போட்டியிடுகிறாா்கள். தோ்தல் நடைபெறவிருக்கும் 36 தொகுதிகளும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான இடங்களாகும். பாஜகவின் இரண்டாவது வேட்பாளா் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. 100 உறுப்பினா்களைக் கொண்ட உத்தர பிரதேச சட்ட மேலவையில், பாஜகவுக்கு 35 உறுப்பினா்களும், சமாஜவாதிக்கு 17 உறுப்பினா்ளும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 4 உறுப்பினா்களும் உள்ளனா். காங்கிரஸ், அப்னா தளம் (சோனேலால்), நிஷாத் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு உறுப்பினா்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com