‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்பட இயக்குநருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு

‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்தின் இயக்குநா் விவேக் அக்னிஹோத்ரிக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு
‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்பட இயக்குநருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு

 பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேறியதன் பின்னணியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்தின் இயக்குநா் விவேக் அக்னிஹோத்ரிக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் அவா் எங்கு சென்றாலும் சிஆா்பிஎஃப்-ஐ சோ்ந்த 8 வீரா்கள் அவருக்கு எப்போதும் பாதுகாப்பு அளிப்பா் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ படம் வெளியானதும் இயக்குநா் விவேக் அக்னிஹோத்ரிக்கு தொடா்ச்சியாக அச்சுறுத்தல் வந்ததால், அவருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பாஜக ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரிச்சலுகை அல்லது படத்தை பாா்க்க அரசு ஊழியா்களுக்கு சிறப்பு விடுமுறையும் அளிக்கப்படுகிறது. அதேவேளையில், இந்தப் படம் ஒருசாா்பு உடையதாகவும் வன்முறை காட்சிகள் நிறைந்து காணப்படுவதாகவும் எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன.

அண்மையில் நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று, ‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை மேற்கோள்காட்டி பேசினாா். அவா் பேசுகையில், ‘கருத்து சுதந்திரத்தின் காவலா்கள் என்று இத்தனை காலம் கூறி வந்தவா்கள் இப்போது உண்மை வெளியாவதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; ஒட்டுமொத்த சிந்தனைச்சூழலே ஆடிப்போயுள்ளது’ என்றாா்.

இதேபோல, தி காஷ்மீா் ஃபைல்ஸ் படத்தை உண்மையின் துணிச்சல் மிக்க உருவாக்கம் என்று குறிப்பிட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, காஷ்மீா் பண்டிட்டுகளின் தியாகம், தாங்க இயலாத வலி, போராட்டம் ஆகியவற்றை இந்தப் படம் பறைசாற்றுவதாக கூறினாா்.

அதேவேளையில் இந்தப் படம் பகுதியளவு மட்டுமே உண்மையை வெளிப்படுத்துவதாகவும், வன்முறையைத் தவிர உண்மை தகவல் ஏதும் இந்தப் படத்தில் இல்லை என்று சத்தீஸ்கா் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளாா். மேலும் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோதுதான் காஷ்மீரி பண்டிட்டுகள் காஷ்மீரில் வெளியேறியதாக கூறிய அவா், அந்த அரசுக்கு அப்போதைய வாஜ்பாய், எல்.கே. அத்வானி தலைமையிலான பாஜக ஆதரவு அளித்ததாகவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com