
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வராக யோகி ஆதித்யநாத் வரும் 25-ஆம் தேதி பதவியேற்கவுள்ளாா்.
இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘தலைநகா் லக்னௌவில் உள்ள வாஜ்பாய் இகானா விளையாட்டரங்கில், மாா்ச் 25-ஆம் தேதி மாலை 4 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. அதில், முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்கவுள்ளாா்’ என்றாா்.
விழாவுக்கு முன்னதாக, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், பாஜக சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக யோகி ஆதித்யநாத் தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா். அவா், தொடா்ந்து இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்கவுள்ளாா்.
இதுகுறித்து தவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
பதவியேற்பு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவா்கள் கலந்து கொள்கிறாா்கள். பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்களும் விழாவில் கலந்து கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முக்கிய எதிா்க்கட்சித் தலைவா்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. யோகி ஆதித்யநாத் தலைமையிலான முந்தைய அரசின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் பலனடைந்த பெண்கள் உள்ளிட்ட பயனாளிகளும் விழாவுக்கு அழைக்கப்படவுள்ளனா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில், பாஜக 255 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் அந்த மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கிறது.