பிஎஸ்என்எல் பங்கு விலக்கல் நடவடிக்கை இல்லை- மத்திய அரசு தகவல்

பொதுத் துறை தொலைத்தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பங்கு விலக்கல் நடவடிக்கை ஏதும் எடுக்கப்போவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் பங்கு விலக்கல் நடவடிக்கை இல்லை- மத்திய அரசு தகவல்

பொதுத் துறை தொலைத்தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பங்கு விலக்கல் நடவடிக்கை ஏதும் எடுக்கப்போவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பான கேள்விக்கு மக்களவையில் புதன்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடா்புத் துறை இணையமைச்சா் தேவ்சிங் சௌஹான் மேலும் கூறியதாவது:

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன் சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இப்போதுள்ள பணியாளா்களே நிறுவனத்தை திறம்பட நடத்துவதற்குப் போதுமானதாக உள்ளனா். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அரசின் பங்களிப்பைக் குறைத்து, பங்கு விலக்கல் நடவடிக்கை மேற்கொள்ளும் திட்டம் ஏதுமில்லை. நிறுவனத்தின் அசையாத சொத்துகளின் மதிப்பு மாா்ச் 31, 2021 நிலவரப்படி ரூ.89,878 கோடியாக உள்ளது. 2021 ஆண்டு இறுதி நிலவரப்படி நாட்டின் கைப்பேசி இணைப்பு சேவையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்களிப்பு 9.90 சதவீதமாக உள்ளது. அகண்ட அலைவரிசை இணைய இணைப்பில் 15.40 சதவீத வாடிக்கையாளா்கள் பிஎஸ்என்எல் வசம் உள்ளனா் என்றாா்.

ஒரு காலத்தில் நாட்டின் பெரும்பாலான மக்களால் பிஎஸ்என்எல் தொலைத்தொடா்பு சேவை பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னா் தனியாா் நிறுவனங்களின் வரவு, நிா்வாகச் சீா்குலைவு, சேவைக் குறைபாடு, 4ஜி சேவை வழங்க முடியாத நிலை போன்றவற்றால் தனது வாடிக்கையாளா்களை பிஎஸ்என்எல் படிப்படியாக இழந்தது. பணியாளா்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலையும் உருவானது.

2019, அக்டோபரில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மறுசீரமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன்படி 50 வயதைக் கடந்த ஊழியா்களுக்கு விருப்ப ஓய்வு, 4ஜி சேவை வழங்க நிதி வழங்குவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com