பலப்படுத்தும் பணிகள் முடித்த பிறகே மதிப்பீடு: தமிழக அரசு பதில் மனு

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த விரிவான மதிப்பீட்டை எஞ்சியுள்ள பலப்படுத்தும் பணிகளை முடித்த பிறகே மேற்கொள்ள முடியும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த விரிவான மதிப்பீட்டை எஞ்சியுள்ள பலப்படுத்தும் பணிகளை முடித்த பிறகே மேற்கொள்ள முடியும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, நீர் தேக்கிவைக்கும் அளவு தொடர்பாக தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கோரி கேரளத்தின் பல்வேறு அமைப்புகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பிலும் பல்வேறு எதிர் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
 இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞர் டி.குமணன் மூலம் புதன்கிழமை புதிதாகப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தெதரிவித்திருப்பதாவது:
 உச்சநீதிமன்றம் 27.02.2006 மற்றும் 07.05.2014 ஆகிய தேதிகளில் பிறப்பித்த உத்தரவின்படி, மேற்பார்வைக் குழுவின் இதர முடிவுகளை விரைந்து செயல்படுத்தும் வகையில், எஞ்சியுள்ள அணையின் பலப்படுத்தும் நடவடிக்கைகளை முடிக்கவிடாமல் கேரள அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்குச் செல்லும் வல்லக்கடவு முதல் காட் ரோடு வரையிலான பகுதியில் பழுதுபார்ப்புப் பணிகள் தேவையில்லை என்ற கேரள அரசின் அணுகுமுறை நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணாக உள்ளது. இதனால், சாலையை அமைக்க ஒத்துழைப்பு அளிக்கும்படி கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும். அப்போதுதான், எஞ்சியுள்ள பலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க முடியும்.
 அதேபோன்று பேபி அணைப் பகுதியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக மரங்களை வெட்டுவதற்கும் அனுமதிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் நீர்க்கசிவு குறித்த கேரள அரசின் வாதத்திலும் உண்மையில்லை. இது மேற்பார்வைக் குழுவின் ஆவணத்துக்கு முரணாக உள்ளது. மேலும், நீர்க்கசிவானது வரையறுக்கப்பட்ட அளவுக்குள்தான் உள்ளது. அதாவது, 142 அடிக்கான நீர் அளவில் அதிகபட்ச நீர்க்கசிவு ஒரு நிமிஷத்துக்கு 150-161 லிட்டர் என்ற அளவில்தான் உள்ளது. ஆகவே, இந்த விஷயத்தில் அணையின் பாதுகாப்பு குறித்த மனுதாரர்களின் அச்சம் முற்றிலும் தவறான எண்ணமாகும். பழுதுபார்ப்புப் பணிகளுக்காக தமிழக அரசு 4.1.2021-இல் ரூ.9 கோடியை ஒதுக்கியது. அந்தப் பணிகளை முடிக்கத் தேவையான அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
 நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் (2021) பிரிவு 38-ஆனது, அணையின் தன்மையை நிர்ணயிக்கும் நோக்கத்துக்காக ஒரு விரிவான அணை பாதுகாப்பு மதிப்பீட்டை அணையின் உரிமையாளர் உருவாக்க வேண்டும் என கூறுகிறது. மேலும், இதுபோன்ற முதல் மதிப்பீடு இந்தச் சட்டம் அமலுக்கு வந்த 13.12.2021-இல் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் நடத்தப்பட வேண்டும். இதை மத்திய நீர் ஆணையமும் 24.2.2022-இல் எழுதிய கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், அதன் நிலவர அறிக்கையிலும் அணையின் மீதமுள்ள பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
 அணையின் பாதுகாப்பு குறித்த மீளாய்வு அணையின் உரிமையாளரால் 2026-ஆம் ஆண்டுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கிடையே, இந்த எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ளும் வகையில், தளவாடச்சமான்களை அணைப் பகுதிக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கவும், ஒத்துழைக்கவும் கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்தப் பணிகளை மேற்கொண்ட பிறகு அணையின் உரிமையாளராக உள்ள தமிழக அரசால் மட்டுமே விரிவான மதிப்பீட்டை அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி மேற்கொள்ள முடியும் என தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com