அஸ்ஸாம் - மேகாலய எல்லை பிரச்னை: முக்கிய 6 இடங்களுக்கு தீர்வு

அஸ்ஸாம்- மேகாலய மாநிலங்களுக்கு இடையே கடந்த 50 ஆண்டுகளாக நீடித்து வரும் மாநில எல்லை விவகாரத்தில் முக்கிய திருப்பமாக பிரச்னைக்குரிய எல்லைப் பகுதிகள் 12-இல் 6 இடங்களுக்கு
அஸ்ஸாம் - மேகாலய எல்லை பிரச்னை: முக்கிய 6 இடங்களுக்கு தீர்வு

அஸ்ஸாம்- மேகாலய மாநிலங்களுக்கு இடையே கடந்த 50 ஆண்டுகளாக நீடித்து வரும் மாநில எல்லை விவகாரத்தில் முக்கிய திருப்பமாக பிரச்னைக்குரிய எல்லைப் பகுதிகள் 12-இல் 6 இடங்களுக்கு இரு மாநில அரசுகள் இடையே சமரசத் தீர்வு மேற்கொள்ளப்பட்டு செவ்வாய்க்கிழமை உடன்படிக்கை கையொப்பமானது.
 இந்த நிகழ்வு வடகிழக்கு இந்தியர்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார்.
 புது தில்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மேகாலய முதல்வர் கான்ராட் சங்மாஆகியோர் முன்னிலையில் இந்த உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது.
 இந்த ஒப்பந்தம் மூலம் இரு மாநிலங்களுக்கு இடையே 884.9 கி.மீ. நிலப்பரப்பில் பிரச்னைக்குரிய 12 இடங்களில் 6 இடங்களுக்குத் தீர்வு எட்டப்படும்.
 இதுதொடர்பாக அமைச்சர் அமித் ஷா கூறுகையில், "இந்த உடன்படிக்கை மூலம் இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை விவகாரத்தில் 70 சதவீத பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது வடகிழக்கு இந்தியர்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும்' என்றார்.
 இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 6 இடங்களும் 36.79 சதுர கி.மீ. பரப்பளவில் 36 கிராமங்களை உள்ளடக்கியதாகும்.
 முன்னதாக எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரு மாநிலங்களும் தலா மூன்று சட்டக் குழுக்களை நியமித்தன. இந்தக் குழுக்கள் இரு மாநில முதல்வர்களுடனும் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை மேற்கொண்டது. அதில் இரு மாநிலங்களுக்கு இடையே எல்லை விவகாரத்தில் ஒவ்வொரு கட்டமாக தீர்வு காண்பது என முடிவு எட்டப்பட்டது.
 அதன்படி சட்டக் குழுக்கள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் முதல் கட்டமாக எல்லையில் 36.79 சதுர கி.மீ. நிலப்பரப்பு உடன்படிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் அஸ்ஸாம் மாநிலம் 18.51 சதுர கி.மீ. பரப்பளவை தனது கட்டுப்பாட்டில் நிர்வகிப்பது எனவும், மேகாலயம் 18.28 சதுர கி.மீ. பரப்பளவை தனது கட்டுப்பாட்டில் நிர்வகிப்பது எனவும் முடிவு எட்டப்பட்டது.
 இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லைப் பிரச்னை கடந்த 50 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. எனினும் அண்மைக் காலங்களில் இதற்கு சுமுகத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 மேகாலய மாநிலம் கடந்த 1972-ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து பிரித்து தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. ஆனால் அஸ்ஸாம் மாநிலத்தின் மறுபுனரமைப்பு சட்டம்-1971, புதிதாக உருவான மேகாலயத்துக்கு பல சவால்களை அளித்து வந்தது. அதில் எல்லையில் 12 இடங்களில் சர்ச்சைகள் தொடர்ந்து வந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com