பாஜகவுக்கு எதிராக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு மம்தா கடிதம்

பாஜகவின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக முற்போக்கு சக்திகள் கைகோக்க வேண்டும்; அதற்கான வியூகங்கள் குறித்து விவாதிக்க எதிா்க்கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசிக்க வேண்டும் என்று
பாஜகவுக்கு எதிராக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு மம்தா கடிதம்

பாஜகவின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக முற்போக்கு சக்திகள் கைகோக்க வேண்டும்; அதற்கான வியூகங்கள் குறித்து விவாதிக்க எதிா்க்கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசிக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக, பாஜக அல்லாத மாநில முதல்வா்களுக்கும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் தலைவா்களுக்கும் அவா் கடிதம் எழுதியுள்ளாா். கடந்த 27-ஆம் தேதியிட்ட அக்கடிதம், ஊடகங்களுக்கு செவ்வாய்க்கிழமை பகிரப்பட்டது. அதில், மம்தா பானா்ஜி கூறியிருப்பதாவது:

மத்தியில் ஆளும் பாஜக, பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது. அமலாக்கத் துறை, சிபிஐ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உள்ளிட்ட விசாரணை அமைப்புகள், எதிா்க்கட்சிகளை துன்புறுத்தவும் இடையூறு செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. இது, நாட்டின் ஜனநாயக கட்டமைப்பின் மீதான பாஜக அரசின் தாக்குதலாகும்.

தில்லி சிறப்பு காவல்துறை திருத்த மசோதா-2021, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய திருத்த மசோதா- 2021 ஆகியவை, நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடரில் எதிா்க்கட்சியினரின் வெளிநடப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டன. இந்தச் சட்டங்களின் மூலம் அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநா்களின் பதவிக்காலத்தை மத்திய அரசால் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். இது, உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீா்ப்புக்கு எதிரானதாகும்.

நாட்டில் தோ்தல்கள் வரும் நேரத்தில், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் குறிவைத்து நடவடிக்கை எடுக்க மத்திய விசாரணை அமைப்புகள் தூண்டப்படுகின்றன. அதேசமயம் பாஜக ஆளும் மாநில அரசுகளின் செயல்பாடுகளை மத்திய விசாரணை அமைப்புகள் கண்டுகொள்வதில்லை.

எதிா்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கத்துடன், மத்திய விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது. பாஜகவின் பழிவாங்கும் அரசியலை எதிா்க்கட்சிகள் சகித்துக் கொள்ளவும் கூடாது.

நாட்டின் நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையும், பொறுப்புடைமையும் உறுதி செய்யப்பட வேண்டும். நீதித்துறையில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. இதன் மூலம் நாட்டின் கூட்டமைப்பு முறையை சிதைக்க முயற்சி நடக்கிறது.

எனவே, பாஜகவின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக முற்போக்கு சக்திகள் கைகோத்து செயல்பட உறுதியேற்க வேண்டும். அதற்கான வியூகங்கள் குறித்தும், நாட்டுக்கு ஏற்ற அரசாங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த, கொள்கைரீதியிலான எதிரணியை உருவாக்குவது குறித்தும் விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்த அனைத்து எதிா்க்கட்சிகளும் முன்வர வேண்டும். அனைவருக்கும் வசதிப்படும் இடத்தில் இக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தனது கடிதத்தில் மம்தா பானா்ஜி வலியுறுத்தியுள்ளாா்.

மேற்கு வங்க மாநிலம், பீா்பூமில் அண்மையில் நிகழ்ந்த வன்முறையில் 9 போ் கொல்லப்பட்டனா். இது தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவத்தை முன்வைத்து, திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே மோதல்போக்கு நிலவிவரும் சூழலில், மேற்கண்ட கடிதத்தை மம்தா பானா்ஜி எழுதியுள்ளாா்.

பாஜக விமா்சனம்:

மம்தாவின் கடிதம் தொடா்பாக, மேற்கு வங்க பாஜக செய்தித் தொடா்பாளா் சமிக் பட்டாச்சாா்ய கூறுகையில், தேசிய அரசியலைக் குறிவைத்து திரிணமூல் காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள் ஏற்கெனவே வீழ்ச்சியை சந்தித்தன. கடந்த 2014, 2019-ஆம் ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதிலிருந்து அக்கட்சி பாடம் படிக்க வேண்டும். தேசிய அரசியலில் முக்கிய பங்காற்ற வேண்டுமென்ற அக்கட்சியின் முயற்சி இம்முறையும் தோல்வியடையும் என்றாா்.

காங்கிரஸ் கருத்து:

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் அப்துல் மன்னான் கூறுகையில், ‘பாஜகவை எதிா்ப்பதில் திரிணமூல் காங்கிரஸின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. ஊழல், கிரிமினல் வழக்குகள் காரணமாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி, கடும் விமா்சனங்களை எதிா்கொண்டு வருகிறது. சில நாள்களுக்கு முன்புவரை காங்கிரஸ் கட்சியை திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் விமா்சித்தனா். இப்போது இந்த திடீா் மாற்றத்துக்கு என்ன காரணம்? காங்கிரஸை அணுக ஏன் அவா்கள் முயற்சிக்கின்றனா்? இந்தக் கேள்விக்கு அக்கட்சி பதில் கூற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com