தமிழக கடற்கரைகளை மேம்படுத்த ரூ.100 கோடி வழங்க வேண்டும்: மக்களவையில் திமுக எம்.பி. கோரிக்கை

சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் கடற்கரையில் சுகாதாரம் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்புப் பணிகளை தமிழக உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்கின்றன.
தமிழக கடற்கரைகளை மேம்படுத்த ரூ.100 கோடி வழங்க வேண்டும்: மக்களவையில் திமுக எம்.பி. கோரிக்கை

சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் கடற்கரையில் சுகாதாரம் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்புப் பணிகளை தமிழக உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்கின்றன. இந்தப் பணிகளுக்கான கூடுதல் நிதியாக ரூ.100 கோடியை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவ நிலை மாற்றத்துறை வழங்க கோரி தென்சென்னை தொகுதி திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் வலியுறுத்தினார்.
 மக்களவையில் செவ்வாய்க்கிழமை சிறப்புக் கவனஈர்ப்பு தீர்மானத்தில் இதுகுறித்து வலியுறுத்தி தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது:
 தமிழகத்தில் உள்ள கடற்கரைகள் இயற்கை வழங்கிய கொடை. ஆனால், இவை மேம்படுத்தப்படவில்லை. சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடற்கரையில் சுகாதாரம் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு தேவை. கடற்கரைகள் ஒரு சுற்றுலாத் தலமாக மட்டுமல்லாமல், கூடுகட்டும் ஆமைகள், சிறிய கடல் உயிரினங்களின் வசிப்பிடமாகவும் விளங்குகின்றன. இவை கண்காணிக்கப்பட்டு சூழலியல் பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் கடற்கரை சுற்றுச்சூழல் மற்றும் அழகியல் மேலாண்மை சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மாசு குறைப்பு, கடற்கரை மேம்பாடு, அழகுபடுத்துதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பாதுகாப்பு, கண்காணிப்பு செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு நாட்டில் 10 கடற்கரைகள் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டும் தமிழக கடற்கரை ஒன்று கூட அதில் தேர்வு செய்யப்படவில்லை.
 தமிழகத்தில் சென்னை மெரினா மற்றும் எலியாட்ஸ் கடற்கரைகளில் கண்காணிப்பு கோபுரங்கள், அதிவேக மீட்புப் படகுகள், சுத்தமான, துர்நாற்றம் இல்லாத பயோ}டாய்லெட்டுகள் அமைக்கப்பட வேண்டும். இதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நீலாங்கரை மற்றும் கொட்டிவாக்கம் கடற்கரையை அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி, மாமல்லபுரத்திலும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவேண்டும். ராமேசுவரம், கன்னியாகுமரி போன்ற கடற்கரை பகுதிகளிலும் இந்தப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் இந்தப் பகுதிகளில் உள்ள நகராட்சி அமைப்புடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இதற்கு கூடுதலாக ரூ.100 கோடி நிதி தேவைப்படுகிறது. எனவே, தமிழக கடற்கரைகளை அழகுபடுத்த மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவ நிலை மாற்றத்துறை அமைச்சகம் ரூ.100 கோடி வழங்கக் கோருகிறேன்.
 மேலும், தமிழக கடற்கரைகளுக்கு நீலக் கொடி சான்றிதழும் வழங்க வேண்டும் எனவும் தமிழச்சி தங்கபாண்டியன் கோரினார். "நீலக் கொடி' சான்றிதழ் என்பது நிலையான படகுச் சுற்றுலா இயக்கம், சுற்றுச் சூழல் மேலாண்மை ஆகியவற்றிற்கான சான்றிதழாகும். டென்மார்க்கை தளமாகக் கொண்ட சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, ஐநா சுற்றுச்சூழல் அமைப்பால் வழங்கப்படும் சான்றிதழ் இது. இந்தியாவில் கப்பாட் (கேரளம்), சிவராஜ்பூர் (குஜராத்), கோக்லா (டியு), காசர்கோடு, படுபித்ரி (கர்நாடகம்), ருஷிகொண்டா (ஆந்திரப் பிரதேசம்) உள்ளிட்ட 8 கடற்கரைகளுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com