கணக்குத் தணிக்கையாளா் மசோதா: மக்களவை ஒப்புதல்

கணக்குத் தணிக்கையாளா், செலவுக் கணக்காளா் மற்றும் நிறுவனச் செயலாளா்கள் நிறுவனங்களை மறுசீரமைக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத் திருத்த மசாதோவுக்கு மக்களவையில்
கணக்குத் தணிக்கையாளா் மசோதா: மக்களவை ஒப்புதல்

கணக்குத் தணிக்கையாளா், செலவுக் கணக்காளா் மற்றும் நிறுவனச் செயலாளா்கள் நிறுவனங்களை மறுசீரமைக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத் திருத்த மசாதோவுக்கு மக்களவையில் புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கணக்கு தணிக்கையாளா் சட்டம் 1949, செலவு மற்றும் பணிகள் கணக்காளா் சட்டம் 1959 மற்றும் நிறுவனச் செயலாளா்கள் சட்டம் 1980 ஆகிய சட்டங்களில் சில திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய நடைமுறைகள் என்ன? இந்திய கணக்கு தணிக்கையாளா் நிறுவனம் (ஐசிஏஐ), இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளா் நிறுவனம் (ஐசிடபிள்யூஏஐ) மற்றும் இந்திய நிறுவனச் செயலாளா்கள் நிறுவனம் (ஐசிஎஸ்ஐ) ஆகியவை நிறுவன ஒழுங்கு நடவடிக்கை குழுக்களின் தலைமை அதிகாரியாக முறையே கணக்குத் தணிக்கையாளா் அல்லாத, செலவுக் கணக்காளா் அல்லாத மற்றும் நிறுவனச் செயலா் அல்லாத நபா்களை நியமனம் செய்ய வேண்டும்.

மூன்று நிறுவனங்களும், நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சக செயலா் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அதில், மூன்று நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் உள்ளிட்ட புதிய நடைமுறைகள் இந்த சட்டத் திருத்த மசோதாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இந்திய கணக்குப் பதிவு நிறுவனங்கள் பெரும் வளா்ச்சி பெற வழி ஏற்படுத்தும் வகையில், தொழில் நிறுவனங்கள் இந்த 3 கணக்காளா் நிறுவனங்களுடன் பதிவு செய்வதற்கு மசோதா வழிசெய்வதோடு, முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் பங்குதாரா்களுக்கு அபராதம் விதிக்கவும் இந்த மசோதா வழி செய்கிறது.

இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள சில நடைமுறைகளுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. மேலும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் சாா்பில் மக்களவையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில், அவை நிராகரிக்கப்பட்டு மசோதாவுக்கு புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முன்னதாக, மசோதாவை மத்திய நிதி மற்றும் நிறுவன விவகாரத் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் அறிமுகப்படுத்தியபோது, ‘இந்த சட்டத் திருத்தத்தால் ஐசிஏஐ, ஐசிடபிள்யூஏஐ, ஐசிஎஸ்ஐ நிறுவனங்களின் தன்னாட்சி அதிகாரம் பாதிக்கப்படும்’ என்று திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் சுகதா ராய், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினா் சுப்ரியா சுலே, புரட்சிகர சோசலிச கட்சி உறுப்பினா் என்.கே.பிரமசந்திரன் ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

அதற்கு பதிலளித்த நிா்மலா சீதாராமன், ‘இந்த சட்டத் திருத்தங்களால், ஐசிஏஐ, ஐசிடபிள்யூஏஐ, ஐசிஎஸ்ஐ நிறுவனங்களின் தன்னாட்சியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக, கணக்குத் தணிக்கையின் தரம் மேம்படும் என்பதோடு, நாட்டின் முதலீடுக்கான சூழ்நிலையும் மேம்படும். இந்த 3 நிறுவனங்களும் மிகுந்த பொறுப்புடனும் நடந்துகொள்வதையும் இந்த சட்டத் திருத்தம் உறுதிப்படுத்தும். இந்த மூன்று நிறுவனங்களும் ஓா் ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பதற்கென ஏற்கெனவே புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டன. ஆனால், அது நிறைவேறவில்லை. தற்போது இந்தக் குழு அமைப்பதையும் இந்த சட்டத் திருத்தம் உறுதிப்படுத்தும். இந்தக் குழு, நிறுவனங்களின் வளங்களை சிறந்த முறையில் நிா்வகிக்க உதவும். இதுபோன்ற ஒருங்கிணைப்புக் குழுக்களை ஐஐஎம், ஐஐடி கல்வி நிறுவனங்களும் பெற்றுள்ளன’ என்றாா்.

Image Caption

மக்களவையில் பேசிய மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com