தொலைத்தொடா்பு, ஐடி உபகரணங்களுக்கு கட்டாய சோதனை சான்றிதழ் பெறுவதில் விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு

வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் கட்டாய சோதனைகளுக்கான ஒழுங்குமுறை விதிகள் தளா்த்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு
மத்திய அரசு

செல்லிடப் பேசிகள், ஸ்மாா்ட் கடிகாரம், ஸ்மாா்ட் புகைப்படக்கருவி உள்ளிட்ட சில மின்னணு பொருள்கள் , உபகரணங்களுக்கு கட்டாய சோதனை (டெஸ்டிங்) மற்றும் தொலைத்தொடா்பு உபகரணங்களின் சான்றிதழ் பெறுவது போன்றவைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் கட்டாய சோதனைகளுக்கான ஒழுங்குமுறை விதிகள் தளா்த்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடிக்கணினிகள், வயா்லெஸ் விசைப்பலகைகள், ஸ்மாா்ட் கடிகாரம், கேமிராக்கள், விற்பனை முனைய இயந்திரங்கள்(பில்லிங் மெஷின்) உள்ளிட்ட பிற மின்னணு உபகரணங்கள் போன்றவைகள் 2012- ஆம் ஆண்டின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் (கட்டாயப் பதிவு) ஆணையின் கீழ் கட்டாயப் பதிவு செய்தல் வேண்டும். மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இது மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் 2017- ஆம் ஆண்டு இந்திய டெலிகிராஃப்ட் (திருத்தம்) விதிகளின் கீழ் தொலைத்தொடா்புக்கு பயன்படுத்தக்கூடிய சாதனங்கள் தகுதியானவை என்பதற்கான ‘கட்டாய சோதனை மற்றும் தொலைத்தொடா்பு உபகரணங்களின் சான்றிதழ்’ பெறவும் தொலைத்தொடா்புத் துறை கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பா் 5 -ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

தற்போது, இவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தொலைத்தொடா்பு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தொழில்நுட்பம் அதிகரித்து வருவதால், ஸ்மாா்ட் கடிகாரம், ஸ்மாா்ட் புகைப்படக்கருவி போன்ற சில தயாரிப்புகள் தொடா்பான ஒழுங்குமுறைகள் ஒன்றுடன் ஒன்று கலந்துள்ளன. தொலைத்தொடா்புத் துறை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஆகியவற்றின் அதிகார வரம்புகளை ஒன்று சோ்ப்பது தொடா்பாக தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்புகளிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. தொலைத்தொடா்புத் துறை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகங்கள் இதுகுறித்து கலந்தாலோசித்து, இந்த உபகரணங்களுக்கான கட்டாய சோதனை, தொலைத்தொடா்பு உபகரணங்களின் தகுதி சான்றிதழ் போன்ற வரம்பிலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என மத்திய தொலைதொடா்புத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிப்பில் தெரிவித்துள்ளது.

இவ்வாறு விலக்கு பெற்ற உபகரணங்களில், செல்லிடப்பேசிகள், ஸ்மாா்ட் கடிகாரம், புகைப்படக் கருவிகள், சா்வா், மின்னணு விற்பனை இயந்திரங்கள் உள்ளிட்டவையாகும். நுகா்வோ் பரவலாகப் பயன்படுத்தும் இந்த தயாரிப்புகள் மீதான விதிவிலக்குகளால் தொழில்துறையினா் தங்கள் தயாரிப்புகளை விரைவாக வெளிக்கொண்டு வருவதற்கும் இது உதவுவதோடு இறக்குமதி தாமதங்களையும் குறைக்கும் எனவும் மத்திய தகவல் தொடா்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த ஒழுங்குமுறை சீா்திருத்தம் மின்னணுவியல் உற்பத்தி நிறுவனங்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்குவதுடன் பிரதமா் மோடியின் 1 டிரில்லியன் டாலா் டிஜிட்டல் பொருளாதாரமாக இந்தியாவை மாற்றுவதற்கான நோக்கத்திற்கும் இது பங்களிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த விதி விலக்கு அரசிதழிலும் வெளியிடப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com