உக்ரைன் போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது: ஜெர்மனியில் பிரதமர் நரேந்திர மோடி

ரஷியா-உக்ரைன் இடையேயான போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 
உக்ரைன் போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது: ஜெர்மனியில் பிரதமர் நரேந்திர மோடி

ரஷியா-உக்ரைன் இடையேயான போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

தனது மூன்று நாள் ஐரோப்பிய பயணத்தை திங்கள்கிழமை தொடங்கிய பிரதமர் மோடி முதலில் ஜெர்மனி சென்றடைந்தார். தலைநகர் பெர்லின் விமான நிலையத்துக்கு வெளியே திரண்டிருந்த இந்தியர்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸை சந்திக்கச் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 

அதையடுத்து இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாகப் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ""இந்தியா-ஜெர்மனி இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகப் பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. இருதரப்பு நல்லுறவு குறித்து மறுஆய்வு செய்த தலைவர்கள், வர்த்தகம், கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் நிலவி வரும் ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதிபூண்டனர்'' என்று குறிப்பிடப்பட்டது. 

யாருக்கும் வெற்றி கிடைக்காது: 

பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருநாட்டுப் பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறுகையில், ""உக்ரைன்-ரஷியா மோதல் தொடங்கியபோதே வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, பிரச்னைக்குப் பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காணப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்தியது. 

இந்தப் போரில் எத்தரப்புக்கும் வெற்றி கிடைக்காது. ஆனால், அனைவரும் பெருமளவில் பாதிக்கப்படுவர். உக்ரைன் விவகாரத்தால் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டுள்ளது; உரங்கள், உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், உலகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளும், ஏழ்மை நாடுகளுமே அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன. 

போரால் மனித குலத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தே இந்தியா கவலை கொள்கிறது. இந்த விவகாரத்தில் அமைதியையே இந்தியா விரும்புகிறது.

வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை: ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளைத் துரிதப்படுத்த இந்தியா உறுதி கொண்டுள்ளது. 

ஜனநாயக நாடுகளில் இந்தியாவும் ஜெர்மனியும் பல்வேறு பொதுவான கொள்கைகளைப் பகிர்ந்து கொண்டு வருகின்றன'' என்றார். 

முக்கியப் பங்கு: ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""சர்வதேச பொருளாதாரத்திலும், பருவநிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தையிலும் இந்தியா முக்கியப் பங்கு வகித்து வருகிறது'' என்றார்.

ஜெர்மனியில் நடைபெறவுள்ள ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு அவர் அழைப்புவிடுத்தார். 

இந்தியா-ஜெர்மனி அரசுப் பேச்சுவார்த்தை: இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை (ஐஜிசி) கூட்டமானது கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 6-ஆவது ஐஜிசி கூட்டமானது திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் இருநாட்டுப் பிரதமர்களும் கலந்துகொண்டனர். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பாக ஜெர்மனி அமைச்சர்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். 

தனித்துவமான நட்புறவு: ஐஜிசி கூட்டமானது இருநாடுகளுக்கிடையேயான தனித்துவமான நட்புறவை வெளிப்படுத்துவதாகப் பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் தெரிவித்தது. பசுமைசார் வளர்ச்சி, நீடித்த எதிர்காலம், சுதந்திரமான, அமைதியான இந்தோ-பசிபிக் பிராந்தியம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்விட்டரில் தெரிவித்தார். 

ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியே இந்தியாவின் மிகப் பெரும் வர்த்தகக் கூட்டாளியாக விளங்கி வருகிறது. இருதரப்பு வர்த்தக மதிப்பானது சுமார் ரூ.1,50,000 கோடியாக உள்ளது. 

தொழில்துறை வட்ட மேஜை: பின்னர் மோடி-ஷோல்ஸ் தலைமையில் தொழில்துறை வட்ட மேஜை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஜெர்மனியின் முன்னணி தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர். இதில் பேசிய பிரதமர் மோடி, இந்திய இளைஞர்களிடத்தில் முதலீடு செய்யுமாறு ஜெர்மன் தொழிலதிபர்களுக்கு  அழைப்பு விடுத்தார். 

பிரதமர் மோடி நெகிழ்ச்சி: தலைநகர் பெர்லின் விமான நிலையத்துக்கு வெளியே கூடியிருந்த இந்தியர்கள், "வந்தே மாதரம்' எனவும், "பாரத் மாதா கீ ஜே' எனவும் முழக்கங்களை எழுப்பி பிரதமர் மோடியை வரவேற்றனர். அப்போது நாட்டுப்பற்றுப் பாடலைப் பாடிய சிறுவனைப் பிரதமர் மோடி பாராட்டினார். இந்தியச் சிறுமி ஒருவர், பிரதமர் மோடியின் ஓவியத்தை அவருக்குப் பரிசளித்தார். 

அதிகாலை வேளை என்றபோதிலும், இந்தியர்கள் பெருந்திரளாகக் கூடி அளித்த வரவேற்புக்குப் பிரதமர் மோடி நெகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தியர்களுடன் கலந்துரையாடல்: அதன் பின்னர், பெர்லினில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில், ""21-ஆம் நூற்றாண்டின் இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றைய இந்தியா தீர்க்கமாக முன்னோக்கிச் செல்கிறது. புதிய இந்தியா பாதுகாப்பான எதிர்காலம் குறித்து சிந்திக்கவில்லை. மாறாக இடர்பாடுகளை எதிர்கொள்வது குறித்தும் புத்தாக்கம் குறித்தும் சிந்திக்கிறது. 

கடந்த 2014-இல் இந்தியாவில் வெறும் 200-400 புதிய நிறுவனங்கள் (ஸ்டார்ட்அப்) மட்டுமே இருந்தன. ஆனால் இன்றைக்கு 68,000-க்கும் அதிகமான புதிய நிறுவனங்களை இந்தியா கொண்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் நேரடி பயன்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.22 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு செலுத்தியுள்ளது'' என்றார் பிரதமர் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com