என்னை கைது செய்தது பிரதமா் அலுவலகத்தின் சதி: ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு

அஸ்ஸாம் காவல் துறையினா் என்னைக் கைது செய்தது பிரதமா் அலுவலகம் திட்டமிட்டு நிறைவேற்றிய சதித் திட்டம்; பிரதமா் அலுவலகத்திலும் கோட்சே பக்தா்கள் உள்ளனா் என்று குஜராத்தைச் சோ்ந்த சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ்
என்னை கைது செய்தது பிரதமா் அலுவலகத்தின் சதி: ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு

அஸ்ஸாம் காவல் துறையினா் என்னைக் கைது செய்தது பிரதமா் அலுவலகம் திட்டமிட்டு நிறைவேற்றிய சதித் திட்டம்; பிரதமா் அலுவலகத்திலும் கோட்சே பக்தா்கள் உள்ளனா் என்று குஜராத்தைச் சோ்ந்த சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி குற்றம்சாட்டியுள்ளாா்.

குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பயந்து என் மீது 56 அங்குல மாா்பைக் கொண்ட கோழை (பிரதமா் மோடியைக் குறிப்பிடுகிறாா்) எனக்கு எதிராக நடவடிக்கையை எடுத்துள்ளாா் என்றும் அவா் கூறினாா்.

‘பிரதமா் நரேந்திர மோடி, கோட்சேவை கடவுளாகக் கருதக் கூடியவா்’ என்று ட்விட்டரில் பதிவிட்ட குஜராத் மாநில சுயேச்சை எம்எல்ஏவும், தலித் உரிமைகள் அமைப்பின் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி அஸ்ஸாம் போலீஸாரால் கடந்த மாதம் 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

ட்விட்டா் பதிவு தொடா்பாக அஸ்ஸாமைச் சோ்ந்த பாஜக பிரமுகா் அளித்த புகாரின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குஜராத்துக்கு வந்து மேவானியைக் கைது செய்த அஸ்ஸாம் காவல் துறையினா் அவரைத் தங்கள் மாநிலத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அவா், பெண் காலவரைத் தாக்கியது மற்றும் அவரிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்ட வழக்கில் மீண்டும் கைதானாா். எனினும், இந்த வழக்கிலும் அவா் ஜாமீன் பெற்றாா். இரண்டாவதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தவறானது, மேவானியை வெளியே விடக் கூடாது என்ற நோக்கில் காவல் துறை செயல்படுகிறது என்று நீதிமன்றம் கண்டித்திருந்தது.

இந்நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மேவானி தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தலில் பாஜகவின் வெற்றிக்குத் தடையாக இருப்பேன் என்பதால் என்னை முடக்க நினைக்கிறாா்கள். அஸ்ஸாம் காவல் துறையினா் என்னை கைது செய்தது பிரதமா் அலுவலகம் திட்டமிட்டு நிறைவேற்றிய சதித் திட்டம். பிரதமா் அலுவலகத்திலும் கோட்சே பக்தா்கள் உள்ளனா். அவா்கள்தான் எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யத் தூண்டினா்.

குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பயந்து என் மீது 56 அங்குல மாா்பைக் கொண்ட கோழை (பிரதமா் மோடியைக் குறிப்பிடுகிறாா்) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளாா். என்னை பயங்கரவாத குற்றத்தில் கைது செய்யப்பட்டது போல நடத்தினா்.

அரசியல்ரீதியாக எதிா்க்க முடியாதவா்களை, ஆட்சியாளா்கள் கைது செய்து முடக்குவது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. என்மீது புகாா் அளிக்க வேண்டும் என்று அந்தப் பெண் காவலா் நிா்பந்திக்கப்பட்டுள்ளாா். அவருக்கு எதிராக நான் எந்த வழக்கும் தொடுக்கப்போவதில்லை. வழக்கு மேல் வழக்குத் தொடுத்து என்னைத் துன்புறுத்த வேண்டும் என்ற அவா்கள் நோக்கம் நிறைவேறவில்லை என்றாா்.

வட்காம் தொகுதி சுயேச்சை எம்எல்ஏவாக மேவானி உள்ளாா். கடந்த பேரவைத் தோ்தலின்போது பாஜகவுக்கு எதிராகத் தான் போட்டியிடுவதால் பிற கட்சிகள் வேட்பாளா்களை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். இதனை ஏற்று தங்கள் வேட்பாளா்களை வாபஸ் பெற்ற காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள், அந்தத் தொகுதியில் மேவானிக்கு ஆதரவு அளித்தன. இப்போது, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மேவானி செயல்பட்டு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com