பேரறிவாளன்: 'மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் எடுக்கும்'

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு உரிய முடிவெடுக்காவிட்டால் நாங்கள் முடிவெடுக்க வேண்டியதிருக்கும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
பேரறிவாளன்: 'மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் எடுக்கும்'
பேரறிவாளன்: 'மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் எடுக்கும்'

புது தில்லி: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு உரிய முடிவெடுக்காவிட்டால் நாங்கள் முடிவெடுக்க வேண்டியதிருக்கும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அரசியல்சாசனம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படி, பேரறிவாளன் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று கூறிய நீதிபதிகள், விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் தரப்பில், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் இன்றைய விசாரணையின் போது கூறினார்.

மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லையென்று மத்திய அரசு சொன்னால், உடனடியாக பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். 

மேலும் பல கேள்விகளை மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.

பேரறிவாளன் விவகாரத்தில் பல இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறோமே? அதன் நிலை என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்ந்து, பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக இதுவரை ஏன் முடிவெடுக்கவில்லை? என்றும், பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்க கால தாமதம் ஏன் என்றும்? சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளனர் நீதிபதிகள்.

பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆளுநர் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய நிலையில், தேவையில்லாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறார்கள் என்று தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதத்தை முன் வைத்தார்.

ஆளுநருக்கு எதிராக வாதிட முடியாது என்று மத்திய அரசின் வழக்குரைஞர் வாதிட, பேரறிவாளனை விடுவிக்க வேண்டிய விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். இதில் மத்திய அரசு ஏன் தலையிடுகிறது? என்று உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் கேள்வி எழுப்பினார்.

இறுதியாக, மத்திய அரசு வரும் செவ்வாய்க்கிழமைக்குள் முடிவெடுக்காவிட்டால் அரசமைப்பின்படி உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய முடிவெடுக்காவிட்டால் நாங்கள் முடிவெடுக்க வேண்டியதிருக்கும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுளள்னர்.

அரசமைப்புச் சட்டம், கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய அதிமுக்கிய விஷயமாக இந்த வழக்கை கருகிறோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டியதுதானே என்றும் நீதிபதிகள் மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com