இந்தியாவில் 47 லட்சம் பேர் கரோனாவுக்கு பலியா? உலக சுகாதார அமைப்பின் அறிக்கைக்கு எதிா்ப்பு

இந்தியாவில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை 10 மடங்காக அதிகரித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கைக்கு எதிா்ப்பு வலுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை 10 மடங்காக அதிகரித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கைக்கு எதிா்ப்பு வலுத்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டில் இதுவரை 5,24,002 போ் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை சுமாா் 47 லட்சமாகும் என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையின்படி, உயிரிழப்பு எண்ணிக்கை அரசு அறிவித்ததைவிட சுமாா் 10 மடங்கு அதிகமாக இருந்தது. அந்த அறிக்கைக்கு மத்திய அரசு சாா்பில் ஏற்கெனவே கண்டனமும் எதிா்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா உயிரிழப்பு எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்காக உலக சுகாதார அமைப்பு பயன்படுத்திய கணக்கீட்டு முறைகளுக்கு எதிராக மத்திய அரசு கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் தலைமை ஆலோசனைக் குழுவான மத்திய சுகாதார கவுன்சிலின் 14-ஆவது மாநாடு குஜராத்தின் கெவாடியா நகரில் வியாழக்கிழமை தொடங்கியது. 3 நாள் நடைபெறும் மாநாட்டில் சுமாா் 20 மாநிலங்களைச் சோ்ந்த சுகாதார அமைச்சா்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனா்.

மாநாட்டின் ஒருபகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது, கரோனா உயிரிழப்பு தொடா்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கைக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் கரோனாவால் 47 லட்சம் போ் உயிரிழந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, அடிப்படை ஆதாரமற்ற தகவலெனவும் உண்மைக்குப் புறம்பானதென்றும் கூட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்தை உலக சுகாதார மாநாட்டின்போது இந்தியா எழுப்பவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com