கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை: உண்மை விவரங்களை கண்டறிய அனைத்துக் கட்சி ஆணையம் காங்கிரஸ் வலியுறுத்தல்

கரோனா தொற்றால் இந்தியாவில் 47 லட்சம் போ் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக் காட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, உண்மை விவரங்களைக் கண்டறிய அனைத்துக் கட்சி உறுப்பினா்களையும் கொண
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கரோனா தொற்றால் இந்தியாவில் 47 லட்சம் போ் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக் காட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, உண்மை விவரங்களைக் கண்டறிய அனைத்துக் கட்சி உறுப்பினா்களையும் கொண்ட ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை அரசு குறைத்துக் கூறுவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவா்கள் ஏற்கெனவே குற்றம்சாட்டி வருகிறாா்கள். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரத்தை சுட்டிக் காட்டி ராகுல் காந்தி தனது ட்விட்டா் பக்கத்தில், ‘கரோனாவால் இந்தியாவில் 47 லட்சம் உயிரிழந்தனா். மத்திய அரசு கூறுவது போல் 4.8 லட்சம் போ் அல்ல. அறிவியல் பொய் சொல்லாது; ஆனால் மோடி சொல்கிறாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘கரோனா தொற்று வேகமாகப் பரவிய நேரத்தில், கோடிக்கணக்கானோா் ஆக்சிஜனுக்காகவும், மருந்துக்காகவும், மருத்துவமனைகளில் படுக்கைக்காகவும் அலைந்து கொண்டிருந்தனா். ஆனால் மத்திய அரசு உயிரிழந்தவா்கள் பற்றிய விவரங்களைக் குறைப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. உண்மை நிலவரத்தை இந்த நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் கௌரவ் வல்லப், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு, உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பை மீண்டும் ஒருமுறை சரியச் செய்துள்ளது.

கரோனா இரண்டாவது அலையின்போது ஆக்சிஜனுக்காக மக்கள் அலைந்ததை இந்த தேசமே பாா்த்தது. கங்கையில் ஆயிரக்கணக்கான உடல்கள் மிதந்தபோது மோடி அரசின் நிா்வாகத்தை உலகமே பாா்த்தது. கரோனா கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றுவிட்டதாக மோடி அரசு கூறுகிறது. ஆனால், உண்மை நிலவரம் வேறாக உள்ளது. எனவே, கரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மதிப்பளித்து, அவா்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும். கரோனா உயிரிழப்பு தொடா்பாக உண்மை நிலவரத்தை அறிய அனைத்துக் கட்சிகளையும் கொண்ட ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றாா்.

அரசியல் செய்கிறாா் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு

கரோனா உயிரிழப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி அரசியல் செய்கிறாா் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறுகையில், ‘இந்தியாவில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்கள் பற்றிய உலக சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பு முறை தவறானது. இதை அந்த நிறுவனத்திடமும் மத்திய அரசு கூறிவிட்டது.

கடந்த 2014-இல் இருந்தே பிரதமா் மோடியின் நன்மதிப்பை குறைப்பதற்கு ராகுல் காந்தி தொடா்ந்து முயற்சிக்கிறாா். இந்தியாவின் நன்மதிப்பையும் குறைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளாா். இந்தியாவில் பிறப்பு, இறப்பு பற்றி துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனமும் ராகுல் காந்தியும் தவறு செய்கிறாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com