ஒடிசா: கிழக்குக் கரையோரப் பகுதி மக்களுக்கு சூறாவளி புயல் எச்சரிக்கை

ஒடிசாவின் கிழக்குக் கரையோரப் பகுதி மக்களுக்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புவனேஸ்வர்/கொல்கத்தா: ஒடிசாவின் கிழக்குக் கரையோரப் பகுதி மக்களுக்கு சூறாவளி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை புயலாக வலுப்பெற்று, அடுத்த வார தொடக்கத்தில் ஆந்திரம் - ஒடிசா கடற்கரைக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள வானிலை அமைப்பு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று சனிக்கிழமைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இது ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் மேலும் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சூறாவளி புயல்: இது சூறாவளி புயல் உருவாக வாய்ப்புள்ளதால் அடுத்த வாரம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைக்கு இடையில் கங்கை நதியின் மேற்கு வங்க மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வானிலை மையத்தின் முன்னெச்சரிக்கையைத் தொடர்ந்து பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

இந்த பகுதிகள் கடந்த 2021 இல் 'யாஸ்', 2020 இல் 'ஆம்பன்' மற்றும் 2019 இல் 'ஃபானி' என மூன்று சூறாவளி புயல்களை சந்தித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இயக்குநர் மிருதஞ்சய் மொஹபத்ரா கூறியதாவது: 
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடலிலும், கிழக்கு-மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இது மே 10 -ஆம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளது. இது எங்கு கரையைக் கடக்கும் என்பது குறித்து எந்த முன்னறிவிப்பையும் இதுவரை வெளியிடப்படவில்லை. 

மேலும், மே 7-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவான பின்னர்தான் புயல், காற்றின் வேகம், நிலச்சரிவு குறித்த விவரங்களை தெரிவிக்க இயலும்.

மே 9-ஆம் தேதி முதல் கடல் சீற்றமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சூறாவளி புயல் காற்றின் வேகம் கடலில் மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுளளதாக" மொஹபத்ரா கூறினார்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையர் (எஸ்ஆர்சி) பி. கே. ஜெனா கூறுகையில், “நாங்கள் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 17 குழுக்கள், ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படையின் 20 குழுக்கள் மற்றும் 175 தீயணைப்புத் துறை பணியாளர்களின் சேவையையும் கோரியுள்ளோம். 

”இது தவிர, அவசரநிலைக்கு மேலும் 10 குழுக்களை முன்பதிவு செய்யுமாறு தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். 

கடலில் மீனவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள ஒடிசா தயாராக உள்ளது என்று கூறினார். 

இதுகுறித்து 18 மாவட்ட ஆட்சியர்களுடன் கணொலி மூலம் ஆலோசனை நடத்திய ஜெனா, அவர்களிடம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும், மின் மற்றும் தொலைத்தொடர்புத் துறையினர் சூறாவளி புயலால் தங்களது கோபுரங்கள், மின் கம்பங்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

“சூறாவளியின் போது மக்கள் பொதுவாக மாம்பழம், தேங்காய் மற்றும் பிற பழங்களை சேகரிப்பதற்காக தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், இதுபோன்ற நேரங்களில் வெளியே வருவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்” என்று அவர் எச்சரித்துள்ளார். 

இதனிடையே தீயணைப்புப் பணியாளர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை இயக்குநர் எஸ்.கே. உபாதயா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com