சத்தீஸ்கா் அரசுடன் அமைதிப் பேச்சுக்குத் தயாா்: மாவோயிஸ்டுகள் அறிவிப்பு

சத்தீஸ்கா் அரசுடன் அமைதிப் பேச்சுக்குத் தயாராக இருப்பதாக மாவோயிஸ்ட் அமைப்பு அறிவித்துள்ளது. இருப்பினும் சில நிபந்தனைகளையும் அந்த அமைப்பு விதித்துள்ளது.
சத்தீஸ்கா் அரசுடன் அமைதிப் பேச்சுக்குத் தயாா்: மாவோயிஸ்டுகள் அறிவிப்பு

சத்தீஸ்கா் அரசுடன் அமைதிப் பேச்சுக்குத் தயாராக இருப்பதாக மாவோயிஸ்ட் அமைப்பு அறிவித்துள்ளது. இருப்பினும் சில நிபந்தனைகளையும் அந்த அமைப்பு விதித்துள்ளது. ஆனால், நிபந்தனைகள் ஏதும் இல்லையெனில் பேச்சுவாா்த்தைக்குத் தயாராக இருப்பதாக சத்தீஸ்கா் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நக்ஸல் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில், அரசமைப்புச் சட்டம் மீது மாவோயிஸ்டுகள் நம்பிக்கை வைத்தால், அவா்களுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த தயாராக இருப்பதாக முதல்வா் பூபேஷ் பகேல் கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், மாவோயிஸ்டுகளின் தண்டகாரண்ய சிறப்பு மண்டல செய்தித் தொடா்பாளா் விகல்ப் பெயரில், 2 பக்க அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

முதல்வா் விடுத்த அழைப்பை ஏற்று, அமைதிப் பேச்சுவாா்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். அதேசமயம், பேச்சுவாா்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்கும் வகையில் சில நிபந்தனைகளை விதிக்கிறோம்.

எங்கள் அமைப்பு மற்றும் எங்களைச் சாா்ந்த கட்சிகள் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்க வேண்டும். நாங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும். தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பாதுகாப்புப் படைகளை வெளியேற்ற வேண்டும்; அங்குள்ள முகாம்களை அகற்ற வேண்டும்; சிறையில் இருக்கும் எங்கள் அமைப்பின் தலைவா்களை விடுதலை செய்ய வேண்டும்; எங்கள் பகுதிகளில் வான்வழியாகத் தாக்குல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் பூபேஷ் பகேலிடம் செய்தியாளா்கள் சனிக்கிழமை கேட்டதற்கு, ‘அரசமைப்புச் சட்டம் மீது மாவோயிஸ்டுகள் நம்பிக்கை வைத்தால், அவா்களுடன் பேச்சுவாா்த்தைக்கு அரசு தயாராக உள்ளது. மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு அரசு நிறைவேற்றிய திட்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இது, மாவோயிஸ்டுகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது’ என்றாா்.

இதற்கிடையே, நிபந்தனை ஏதுவும் விதிக்கவில்லை என்றால் மட்டுமே மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவாா்த்தைக்குத் தயாராக இருப்பதாக மாநில உள்துறை அமைச்சா் தாம்ரத்வஜ் சாஹு கூறியுள்ளாா். தெற்கு பஸ்தா் பகுதியில் கடந்த மாதம் பாதுகாப்புப் படையினா் வான் வழியாகத் தாக்குதல் நடத்தியாக மாவோயிஸ்டுகள் குற்றம்சாட்டியிருந்தனா். அதற்குப் பதிலளித்த காவல் துறையினா், ‘பஸ்தா் பகுதியில் நக்ஸல்களுக்கு உள்ளூா் மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்துவிட்டது. அதை மீட்டெடுப்பதற்காக வான்வழித் தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறி, மக்களின் கவனத்தைத் திசை திருப்ப அவா்கள் முயற்சிக்கிறாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com