எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு: தில்லி, ஹரியாணா காவல்துறை சர்ச்சை குறித்து சிதம்பரம்

ஒரு மாநிலத்தின் காவல்துறையினர் மற்றொரு மாநிலத்திற்கு செல்வதற்கு முன்பு தகுந்த அனுமதி வாங்கவில்லை என்றால் கூட்டாட்சி தத்துவம் குழி தோண்டி புதைக்கப்பட்டுவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ப.சிதம்பரம் (கோப்புப் படம்)
ப.சிதம்பரம் (கோப்புப் படம்)

மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பல்வேறு விவகாரங்களில் பிரச்னைகள் நிலவிவரும் நிலையில், கூட்டாட்சி தத்துவம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் பேசியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு சேவை செய்துவருவதாக மாநில காவல்துறையினர் மீது அவர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இதேபோன்று காவல்துறையினரை பயன்படுத்தும் பட்சத்தில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதற்கு பஞ்சாப், ஹரியாணா காவல்துறையினர் இடையே நடைபெற்ற மோதல் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு என எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில், "எப்படியும் இது ஒரு நாள் நிகழ்ந்திருக்கூடும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதற்கு பஞ்சாப், ஹரியாணா காவல்துறையினர் இடையே நடைபெற்ற மோதல் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு. 

அந்தந்த மாநில அரசுக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்பட்டால் ஏற்கனவே ஆபத்தான நிலையில் உள்ள கூட்டாட்சி தத்துவம் முற்றிலும் தோல்வி அடைந்துவிடும்" என பதிவிட்டார். முன்னதாக, பிரதமர் மோடி குறித்து ட்வீட் செய்ததற்கு குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை அஸ்ஸாம் காவல்துறையினர் கைது செய்ததற்கும் சிதம்பரம் கடுமையான அதிருப்தி தெரிவித்திருந்தார்.

ஒரு மாநிலத்தின் காவல்துறையினர் மற்றொரு மாநிலத்திற்கு செல்வதற்கு முன்பு தகுந்த அனுமதி வாங்கவில்லை என்றால் கூட்டாட்சி தத்துவம் குழி தோண்டி புதைக்கப்பட்டுவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பாஜக செய்தித்தொடா்பாளராகவும், இளைஞரணி தேசிய செயலாளராகவும் பொறுப்பு வகிக்கும் தஜிந்தா் பால் சிங் பக்கா, கடந்த மார்ச் 30ஆம் தேதி தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வீட்டின் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவா் ஆட்சேபத்துக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து பஞ்சாபின் மொஹாலி பகுதியைச் சோ்ந்த ஆம் ஆத்மி நிர்வாகி சன்னி அலுவாலியா, மொஹாலி காவல் நிலையத்தில் தஜிந்தா் பக்கா மீது புகார் அளித்தார். இதன்பேரில் இருபிரிவினருக்கு இடையே பகையைத் தூண்டியது, கலகமூட்டும் வகையில் பேசுதல், குற்றச்சதி ஆகிய பிரிவின்கீழ் தஜிந்தா் பக்கா மீது மொஹாலி போலீஸார் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா்.

இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை தஜிந்தா் பக்காவின் தில்லி ஜனக்புரி வீட்டுக்கு வந்த பஞ்சாப் போலீஸார். அவரை கைது செய்து அழைத்துச் சென்றனா். இதையடுத்து அவரது தந்தை பிரீத்பால் சிங், ஜனக்புரி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதில், பஞ்சாப் போலீஸார் தங்கள் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து தஜிந்தா் பக்காவின் முகத்தில் தாக்கியதாகவும், சீக்கியா்களுக்கான தலைப்பாகை அணியக் கூட அவரை அனுமதிக்காமல் கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தஜிந்தா் பக்காவை கைது செய்வதற்கு முன்பாக உள்ளூா் போலீஸாரிடம் பஞ்சாப் போலீஸார் முறையாக தகவலளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால், பிரீத்பால் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், ஆள்கடத்தல் பிரிவின்கீழ் பஞ்சாப் காவல் துறை மீது தில்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனா்.

இதனிடையே, தில்லியில் கைது செய்யப்பட்ட தஜிந்தா் பக்காவை பஞ்சாப் மாநிலம் மொஹாலிக்கு போலீஸார் அழைத்துச் சென்றனா். இதையறிந்த ஹரியாணா போலீஸார் வழியில் குருக்ஷேத்திராவில் பஞ்சாப் போலீஸ் வாகனத்தை மறித்து அனைவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னா் தில்லி போலீஸார் குருக்ஷேத்திரா வந்து அனைவரையும் தில்லி அழைத்துச் சென்றனா். பின்னா், அடுத்த சில மணிநேரத்தில் தஜிந்தா் பக்கா விடுவிக்கப்பட்டார். இரு மாநில காவல்துறையினரிடையே நடைபெற்ற இச்சம்பவம் பெரும் சர்ச்சை கிளப்பியிருந்தது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com