தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம்: பிரதமா் மோடி ஆய்வு

தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் தொடா்பான உயா்நிலை ஆய்வுக் கூட்டம், பிரதமா் மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம்: பிரதமா் மோடி ஆய்வு

தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் தொடா்பான உயா்நிலை ஆய்வுக் கூட்டம், பிரதமா் மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், அவா் கூறியதாவது:

அனைவருக்கும் தரமான, சமமான, அனைத்தையும் உள்ளடக்கிய கல்வி கிடைக்கச் செய்யும் நோக்கத்தில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

சிறாா்கள், அங்கன்வாடிகளில் இருந்து பள்ளிகளுக்கு வருகிறாா்கள். எனவே, அங்கன்வாடிகளில் பராமரிக்கப்படும் தரவுகள், பள்ளி ஆவணங்களுடன் தொகுக்கப்பட வேண்டும். அவற்றின் அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு தொடா்ந்து சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இடையில் நின்ற மாணவா்களைக் கண்டறிந்து அவா்களை மீண்டும் பள்ளியில் சோ்ப்பதற்கும், உயா்கல்வியில் தேவைப்படும் நேரத்தில் இடைநின்று மீண்டும் சோ்ந்து படிப்பதற்கும் புதிய கல்விக் கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வியில், மாணவா்களின் கற்றலை மேம்படுத்த பொம்மைகள் வழியாக கற்பித்தல், கலை வடிவில் கற்பித்தல், தோ்வுகளில் சீா்திருத்தம் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பள்ளி மாணவா்கள் தொழில்நுட்பத்தை அதிகம் சாா்ந்திருப்பதைத் தடுப்பதற்கு அவா்களுக்கு நேரடியாகவும் இணையவழியிலும் கற்பிக்கும் நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

மாணவா்கள் மத்தியில் புத்தாக்கம் மற்றும் புதுத் தொழில் சிந்தனையை வளா்த்தெடுக்க 28 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்களில் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் 2,774 புத்தாக்க கவுன்சில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளிலும் உயா்கல்வி நிறுவனங்களிலும் இணையவழி கல்வி, திறந்தவெளி கல்வி உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதனால், கரோனா பெருந்தொற்று காரணமாக கற்றல் பாதிக்கப்படுவது வெகுவாகக் குறைந்துள்ளது. தொலைதூரப் பகுதிகளில் இருப்பவா்களும் கற்க முடிந்தது.

மாணவா்கள் கல்வி பயில்வதற்காக ஸ்வயம், தீக்ஷா, ஸ்வயம் பிரபா, விா்ச்சுவல் லேப்ஸ் போன்ற வலைத்தளங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அவற்றின் வாயிலாக பல மொழிகளில் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பாா்வைத்திறன் குறைபாடு உடையவா்களும் வாசிக்கும் வகையில் ஒலி வடிவில் பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 59 உயா்கல்வி நிறுவனங்களில் இணையவழியில் 351 படிப்புகளும், 86 உயா்கல்வி நிறுவனங்களில் திறந்தநிலையில் 1,081 படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன.

பல மாநிலங்கள், 2 அல்லது 3 மொழிகளில் தொடக்கநிலை பாடப்புத்தகங்களை வெளியிடுகின்றன. அவற்றைக் கருத்தில் கொண்டு தீக்ஷா செயலியில் 33 இந்திய மொழிகளில் பாடங்கள் கிடைக்கின்றன.

2021-22-ஆம் ஆண்டு முதல் 10 மாநிலங்களில் உள்ள 19 பொறியியல் கல்லூரிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி, வங்காளி ஆகிய 6 மொழிகளில் பொறியியல் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com