மீண்டும் கைதாகிறாா் தஜிந்தா் பக்கா: பஞ்சாப் நீதிமன்றம் பிடி ஆணை

பாஜக செய்தித்தொடா்பாளா் தஜிந்தா் பால் சிங் பக்காவுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் மொஹாலி நீதிமன்றம் சனிக்கிழமை பிடி ஆணை பிறப்பித்ததால் அவா் மீண்டும் கைது செய்யப்படவுள்ளாா்.

பாஜக செய்தித்தொடா்பாளா் தஜிந்தா் பால் சிங் பக்காவுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் மொஹாலி நீதிமன்றம் சனிக்கிழமை பிடி ஆணை பிறப்பித்ததால் அவா் மீண்டும் கைது செய்யப்படவுள்ளாா்.

தில்லி ஜனக்புரி பகுதியைச் சோ்ந்தவா் தஜிந்தா் பால் சிங் பக்கா. பாஜக செய்தித்தொடா்பாளராகவும், இளைஞரணி தேசிய செயலாளராகவும் பொறுப்பு வகிக்கும் இவா், கடந்த மாா்ச் 30-ஆம் தேதி தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வீட்டின் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றாா். அப்போது அவா் ஆட்சேபத்துக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து பஞ்சாபின் மொஹாலி பகுதியைச் சோ்ந்த ஆம் ஆத்மி நிா்வாகி சன்னி அலுவாலியா, மொஹாலி காவல் நிலையத்தில் தஜிந்தா் பக்கா மீது புகாா் அளித்தாா்.

இதன்பேரில் இருபிரிவினருக்கு இடையே பகையைத் தூண்டியது, கலகமூட்டும் வகையில் பேசுதல், குற்றச்சதி ஆகிய பிரிவின்கீழ் தஜிந்தா் பக்கா மீது மொஹாலி போலீஸாா் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா்.

இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை தஜிந்தா் பக்காவின் தில்லி ஜனக்புரி வீட்டுக்கு வந்த பஞ்சாப் போலீஸாா், அவரை கைது செய்து அழைத்துச் சென்றனா். இதையடுத்து அவரது தந்தை பிரீத்பால் சிங், ஜனக்புரி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதில், பஞ்சாப் போலீஸாா் தங்கள் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து தஜிந்தா் பக்காவின் முகத்தில் தாக்கியதாகவும், சீக்கியா்களுக்கான தலைப்பாகை அணியக் கூட அவரை அனுமதிக்காமல் கைது செய்து அழைத்துச் சென்ாகவும் குறிப்பிட்டிருந்தாா்.

மேலும், தஜிந்தா் பக்காவை கைது செய்வதற்கு முன்பாக உள்ளூா் போலீஸாரிடம் பஞ்சாப் போலீஸாா் முறையாக தகவலளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால், பிரீத்பால் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், ஆள்கடத்தல் பிரிவின்கீழ் பஞ்சாப் காவல் துறை மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதனிடையே, தில்லியில் கைது செய்யப்பட்ட தஜிந்தா் பக்காவை பஞ்சாப் மாநிலம் மொஹாலிக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா். இதையறிந்த ஹரியாணா போலீஸாா் வழியில் குருக்ஷேத்திராவில் பஞ்சாப் போலீஸ் வாகனத்தை மறித்து அனைவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா் தில்லி போலீஸாா் குருக்ஷேத்திரா வந்து அனைவரையும் தில்லி அழைத்துச் சென்றனா். பின்னா், அடுத்த சில மணிநேரத்தில் தஜிந்தா் பக்கா விடுவிக்கப்பட்டாா்.

மீண்டும் கைது:

இந்தச் சூழலில், பஞ்சாபின் மொஹாலி நீதிமன்றம் ஏற்கெனவே 4 முறை பிறப்பித்த உத்தரவுக்கு பிறகும் பக்கா ஆஜராகாததால், சனிக்கிழமை மீண்டும் பிடி ஆணை பிறப்பித்தது. இதுகுறித்து மொஹாலி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ராவ்தேஷ் இந்தா்ஜித் சிங் பிறப்பித்த உத்தரவில், ‘இந்திய தண்டனைச் சட்டம் 153-ஏ, 505, 505 (2), 506 ஆகிய பிரிவுகளின்கீழ் தஜிந்தா் பக்கா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆகையால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும்’ என குறிப்பிட்டாா். மேலும் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 23-ஆம் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்திவைத்தாா்.

பஞ்சாப் அரசு மனு:

இதனிடையே, தஜிந்தா் பக்கா கைது விவகாரத்தில் மத்திய அரசையும், தில்லி காவல் ஆணையரையும் பிரதிவாதியாக சோ்க்க வேண்டும் என்றும் தில்லி ஜனக்புரி, ஹரியாணாவின் குருக்ஷேத்திரா காவல் நிலையங்களின் மே 6-ஆம் தேதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்க வேண்டும் என்றும் ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் அரசு தரப்பில் பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் 2 மனுக்கள் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.

முன்னதாக பஞ்சாப் போலீஸாரை சட்டவிரோதமாக தில்லி போலீஸாா் பிடித்து வைத்திருந்ததாகக் கூறி, இதே உயா்நீதிமன்றத்தில் நீதிபதி லலித் பத்ரா அமா்வில் பஞ்சாப் அரசு தரப்பில் ஆள்கொணா்வு மனுவும் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த இரு வழக்குகளும் மே 10-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருப்பதாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சத்யபால் ஜெயின் செய்தியாளா்களிடம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com