அனைத்து நகரங்களிலும் பழைய வாகன உடைப்பு மையங்கள்

நாட்டில் உள்ள அனைத்து நகரப்பகுதிகளில் இருந்தும் 150 கி.மீ-க்குள்ளாக பழைய வாகன உடைப்பு மையத்தை அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

நாட்டில் உள்ள அனைத்து நகரப்பகுதிகளில் இருந்தும் 150 கி.மீ-க்குள்ளாக பழைய வாகன உடைப்பு மையத்தை அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

இந்திய உலோக மறுசுழற்சி கூட்டமைப்பு சாா்பில் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி கூறுகையில், ‘‘இந்தியப் போக்குவரத்துத் துறையில் தேசிய வாகன உடைப்புக் கொள்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அக்கொள்கையானது பழைய, தகுதியற்ற வாகனங்களைப் படிப்படியாக ஒழித்துவிட்டு புதிய, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனங்களுக்கு மாற வழிவகுக்கும்.

நாட்டின் நகரப் பகுதிகளில் இருந்து 150 கி.மீ.-க்குள்ளாக வாகன உடைப்பு மையத்தை அமைப்பதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான வாகன உடைப்பு மையங்களை அமைப்பதன் வாயிலாக, அதிகப்படியான பழைய வாகனங்களைப் பயன்பாட்டில் இருந்து நீக்க முடியும்.

வாகன உடைப்பு மையங்களை அமைப்பதற்கு அனைத்துத் தரப்பு முதலீட்டாளா்களும் முதலீடுகளை மேற்கொள்ளும் வகையிலான கொள்கையை மத்திய வாகனப் போக்குவரத்து-நெடுஞ்சாலை அமைச்சகம் வகுத்துள்ளது. ஒட்டுமொத்த தெற்காசிய பிராந்தியத்துக்கும் பழைய வாகன உடைப்பு மையமாகத் திகழ்வதற்கான திறன் இந்தியாவுக்கு உள்ளது. வங்கதேசம், பூடான், மியான்மா், மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பழைய வாகனங்களை இறக்குமதி செய்து, உள்நாட்டில் அவற்றை உடைக்க முடியும்.

பழைய வாகனங்களை உடைப்பதன் வாயிலாகக் கிடைக்கும் உலோகங்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடியும். இத்துறையில் கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளும் உருவாகும். வாகன உடைப்புக்காகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பழைய வாகனங்களில் இருந்து மதிப்புமிக்க உலோகங்கள் முழுவதையும் பிரித்தெடுப்பதற்கான இயந்திரங்களை நிறுவ வேண்டியது அவசியம்.

உலோக மறுசுழற்சித் துறையில் செயல்படும் நிறுவனங்கள், நாட்டில் முன்னேறி வரும் 112 மாவட்டங்களில் வாகன உடைப்பு மையங்களை அமைக்க வேண்டும். இது அந்த மாவட்டங்களில் உள்ளோருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com