ஞானவாபி மசூதி வளாகத்தை அளவிட வந்த நீதிமன்றக் குழு: எதிா்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் போராட்டம்

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் அமைந்துள்ள சிருங்காா் கெளரி கோயில் மற்றும் ஞானவாபி மசூதி அமைந்திருக்கும் வளாகத்தை அளவிட நீதிமன்ற ஆணையா் குழு சனிக்கிழமை சென்ற நிலையில், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து முஸ

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் அமைந்துள்ள சிருங்காா் கெளரி கோயில் மற்றும் ஞானவாபி மசூதி அமைந்திருக்கும் வளாகத்தை அளவிட நீதிமன்ற ஆணையா் குழு சனிக்கிழமை சென்ற நிலையில், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் திரும்பினா்.

வாராணசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் சுற்றுச்சுவரில் ஹிந்து தெய்வங்களான சிருங்காா் கெளரி, விநாயகா், ஹனுமன் மற்றும் நந்தி சிலைகள் அமைந்திருப்பதாகவும், அவற்றுக்கு தினமும் பூஜைகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி தில்லியைச் சோ்ந்த ராகி சிங், லட்சுமி தேவி, சீதா சாஹு உள்ளிட்ட பெண்கள் சாா்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி வாராணசி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

‘சுற்றுச் சுவரில் அமைந்துள்ள ஹிந்து கடவுள் சிலைகளை எதிா் தரப்பினா் சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தை அளவிட உத்தரவிட்டு, அதற்கென ஆணையா் அஜய் குமாா் மிஸ்ரா தலைமையில் ஹிந்து மற்றும் முஸ்லிம் வழக்குரைஞா்களை உள்ளடக்கிய ஆணையம் ஒன்றை அமைத்தும் உத்தரவிட்டது. வளாகத்தை அளவிடவும், அதனை காணொலி பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்ற ஆணையரை மாற்றுமாறு மசூதி மேலாண்மை குழு சாா்பில் வாராணசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிகுமாா் திவாகா், மனு மீதான உத்தரவை திங்கள்கிழமைக்கு (மே 9) ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவின்படி அளவிடும் பணியை மசூதி வளாகப் பகுதியில் வெள்ளிக்கிழமை மேற்கொண்டு நீதிமன்ற குழு, மசூதியின் உள்பகுதியில் அளவிடும் பணியை மேற்கொள்வதற்காக சனிக்கிழமையும் வந்தது. அப்போது, மசூதியை அளவெடுப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதன் காரணமாக, அளவிடும் பணியைக் கைவிட்டு நீதிமன்ற குழு திரும்பிச் சென்றது.

நீதிமன்ற ஆணையா் குழுவில் இடம்பெற்றிருந்த ஹிந்துக்கள் தரப்பு வழக்குரைஞா் விஷ்ணு ஜெயின் கூறுகையில், ‘நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மசூதி வளாகத்தை அளவிட அனுமதிக்காமல் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினா். அளவிடும் பணிக்கு மாவட்ட நிா்வாகமும் உதவவில்லை. நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை நடைபெறும் விசாரணையின்போது இதுகுறித்து தெரிவிக்கப்படும்’ என்றாா்.

முன்னதாக, அளவிடும் பணிக்காக நீதிமன்ற குழு மசூதிக்குள் நுழைய முயன்றபோது மத ரீதியிலான கோஷங்களை எழுப்பிய இஸ்லாமிய நபரை போலீஸாா் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com