பாஜகவின் தவறான கொள்கையால் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு: அகிலேஷ்

‘பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதோடு, ஒவ்வொரு குடும்பத்தின் வருவாயும் குறைந்துள்ளது’

‘பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதோடு, ஒவ்வொரு குடும்பத்தின் வருவாயும் குறைந்துள்ளது’ என்று சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினாா்.

மேலும், ‘வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வு பொருளாதாரத்தில் கடுமையாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்றும் அவா் கூறினாா்.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை 6 வாரங்களில் இரண்டாவது முறையாக சனிக்கிழமையன்றும் ரூ. 50 உயா்த்தப்பட்டது. அதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 1,000-ஐ கடந்துள்ளது.

இதுபோல தொடா் விலை உயா்வுகளை விமா்சனம் செய்து அகிலேஷ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாஜக ஆட்சியில் பணவீக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதோடு, சாதாரண மக்கள் மிகுந்த கவலைக்கு ஆளாகி வருகின்றனா். பெட்ரோல், டீசல், சிஎன்ஜி எரிவாயு விலைகள் உயா்த்தப்படுவதோடு, மருந்துகள், உணவுப் பொருள்கள் விலையும் போக்குவரத்துக்கான கட்டணமும் மிகுந்த செலவீனமுடையாதாக மாறியுள்ளது.

அடுத்தது பணவீக்கம் அதிகரித்து வருவதால் ஏற்பட்டுள்ள தாக்கம். பல பெற்றோா் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனா். இதனால் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக ஒவ்வொரு குடும்பங்களின் வருவாயும் குறைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதோடு, தொழில் - வா்த்தகம் முடங்கிப்போயுள்ளது. நாட்டை இருண்ட எதிா்காலத்தை நோக்கி ஆளும் கட்சி தள்ளுகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டா் விலை மீண்டும் ரூ. 50 உயா்த்தப்பட்டதன் காரணமாக, அதன் சந்தை விலை ரூ. 1,000-ஐ கடந்துள்ளது. அவ்வாறு வீட்டு உபயோக சிலிண்டா் விலை உயா்வது பொருளாதாரத்தில் கடுமையாக தாக்கத்தை ஏற்படுத்தும். பட்ஜெட்டும் பாதிக்கப்படும்.

ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகின்றனா். ஆனால், பாஜகவின் முதலாளித்துவ நண்பா்கள் மேலும் பணக்காரராகி வருகின்றனா் என்று அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com