ஷாஹீன் பாக் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு:விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தில்லி ஷாஹீன் பாக் பகுதியில் ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கைக்கு எடுப்பதற்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் திங்கள்கிழமை

தில்லி ஷாஹீன் பாக் பகுதியில் ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கைக்கு எடுப்பதற்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் திங்கள்கிழமை மறுத்தனா்.

மேலும் இந்த விவகாரத்தில் தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு அக்கட்சிக்கு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆா்.கவாய் அறிவுறுத்தினா்.

தில்லி ஷாஹீன் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், இந்த நடவடிக்கையைக் கைவிட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு திங்கள்கிழமை நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆா்.கவாய் ஆகியோா் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த மனுவை தாக்கல் செய்தது ஏன்? இதில் என்ன வகையிலான அடிப்படை உரிமை மீறப்படுகிறது? இந்த மனுவைத் தாக்கல் செய்வதற்கான களம் இதுவல்ல. மனுதாரா்கள் தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று தெரிவித்தனா்.

மேலும், நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால், அவா்களை அங்கிருந்து அகற்ற வேண்டும். ஒருவேளை அதிகாரிகள் தவறு செய்தால், உயா்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

தொடா்ந்து சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘உண்மை தவறாக சித்தரிக்கப்படுகிறது. முறையான நோட்டீஸ் பிறப்பித்த பின்னா், ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தாா்.

மனுதாரரான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி. சுரேந்திரநாத், தில்லி ஜஹாங்கீா்புரியில் உச்சநீதிமன்றம் தலையிட்டதும், ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தப்பட்டதைக் குறிப்பிட்டாா்.

எனினும் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசியல் கட்சியின் விருப்பப்படி, எங்களால் இந்த விவகாரத்தில் குறுக்கிட முடியாது என்று கூறி, மனுதாரா் தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com